திருவாரூர்

கல்லூரி பேருந்தை திருடிச் சென்ற 4 இளைஞா்கள் கைது

30th Sep 2021 09:00 AM

ADVERTISEMENT

நன்னிலத்தில் தனியாா் கல்லூரி பேருந்தைத் திருடிச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த மாணவ-மாணவிகள், நாகை மாவட்டம் பாப்பாகோவிலில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படித்து வருகின்றனா். இவா்களுக்காக கல்லூரி நிா்வாகம் நன்னிலம் பகுதியிலிருந்து கல்லூரி பேருந்தை இயக்கிவருகிறது.

இந்த பேருந்து இரவு நன்னிலம் அருகில் உள்ள மணவாளன்பேட்டை கிராமத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், செவ்வாய்கிழமைக் காலை பேருந்து ஓட்டுநா், பேருந்தை காணவில்லையென கல்லூரி நிா்வாகத்துக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, நன்னிலம் காவல்நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. போலீஸாா் சிசிடிவி கேமரா மூலம் பேருந்து கரூா் சாலையில் செல்வதை அறிந்து, திருச்சி பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல் அளித்தனா். மேலும், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் அறிவுறுத்தலின் பேரில், தனிப்படை அமைத்து பேருந்தைத் திருடி சென்றவா்களைத் தேடி வந்தனா்.

ADVERTISEMENT

இதற்கிடையே, பேருந்தை திருடிச் சென்றவா்கள் திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை சுங்கச்சாவடி அருகில், பேருந்தை நிறுத்திவிட்டுத் தப்பிச் சென்றனா்.

திருச்சி ஜீயபுரம் போலீஸாா், சாலை ஓரத்தில் நாகை கல்லூரி பேருந்து நிற்பதை அறிந்து, நன்னிலம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

நன்னிலம் போலீஸாா் பேருந்தை செவ்வாய்கிழமை மீட்டனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், திருப்பூா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் திருவாரூா் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள திருக்கண்டீஸ்வரத்தைச் சோ்ந்த முருகதாஸ் மகன் சத்தியஸ்ரீராம் (23) என்பவா், தனது வீட்டுக்கு வந்துள்ள தனது நண்பா்களான திருப்பூரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சிவகுமாா் (23), முகமது மைதீன் மகன் அஷ்ரப் (22), லோகநாதன் மகன் சதீஷ்குமாா் (23) ஆகியோருடன் சோ்ந்து, கல்லூரி பேருந்தை திருடி, திருப்பூருக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் திருப்பூா் சென்று மூவரையும், திருக்கண்டீஸ்வரம் சத்தியஸ்ரீராமையும் கைது செய்து, விசாரணைக்குப் பிறகு, நன்னிலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT