திருவாரூர்

இடிந்து விழுந்த கமலாலய சுற்றுச்சுவர்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு 

DIN

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குட்பட்ட கமலாலயக்குள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. இந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலின் மேற்கு பகுதியில், காசிக்கு இணையான தீர்த்தம் கொண்ட கமலாலயக் குளம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்த நிலையில், கமலாலயக் குளத்தின் தெற்குப்புற சுவரின் ஒரு பகுதி 100 மீ அளவுக்கு இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த பகுதிக்கு எதிரில் திருவாரூர் நகராட்சி அலுவலகமும், அருகில் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. தொடர்ந்து தனியார் மருத்துவனைகள் ஏராளமாக உள்ளன. இதனால், இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்.

மக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் பெருமளவு அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. 

ஆட்சியர் ஆய்வு...

இதைத்தொடர்ந்து, இடிந்து விழுந்த கமலாலயக்குளத்தின் தென்கரை பகுதியை மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

பாதுகாப்பு நடவடிக்கை....
கமலாலயக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், சாலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. விஜயகுமார், கமலாலய குளக்கரை இடிந்த பகுதியை பார்வையிட்டு சேதமடைந்த பகுதியைச் சுற்றி பாதுகாப்பு அரண் அமைக்க உத்தரவிட்டார்.

மேலும், அப்பகுதியில் ஒரு போக்குவரத்து ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 காவலர்கள் 24 மணிநேர பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். கும்பகோணம் மார்க்கத்திலிருந்து வரும் கன மற்றும் இலகு ரக வாகனங்களை இபி இணைப்பு பகுதியில் தடுத்து, விளமல் மெயின்ரோடு வழியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கமலாலயம் குளக்கரை தென்கரைப் பகுதியில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், கமலாலயம் கிழக்கு மேற்கு, வடக்கு கரைகள் வழியாக உள்ளூர் மக்கள், மருத்துவமனைக்குச் செல்லும் இருசக்கரவாகனங்களுக்கு மட்டும் முறையான தணிக்கைக்குப் பிறகு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இடிந்து விழுந்த கமலாலயக் குளத்தின் சேதப் பகுதியை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செவ்வாய்க்கிழமை காலை பார்வையிட்டார். சீரமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்த நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களிடம் பணி விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் குளத்தின் அருகே இறங்கி குளத்தையும் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். 

அப்போது அவர் தெரிவிக்கையில், குளத்தின் சேதமடைந்த பகுதி விரைவில் சரி செய்யப்படும். மேலும் சுற்றுச்சுவர் முழுவதும் வல்லுநர் குழுவால் ஆராயப்பட்டு பக்தர்கள் நீராட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஆய்வின்போது சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT