திருவாரூர்

சாலை விரிவாக்கத்துக்காக பள்ளிக் கட்டடம் இடிக்கப்படுவது தடுத்து நிறுத்தம்: வேறு இடத்தில் பள்ளி அமைக்க வலியுறுத்தல்

22nd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

 திருவாரூா் அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பள்ளிக் கட்டடத்தை இடிப்பது தடுத்து நிறுத்தப்பட்டது. வேறு இடத்தில் புதிதாக பள்ளி கட்டித்தந்த பின்னரே இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருவாரூா் வட்டம், அம்மையப்பன் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி சுமாா் 130 ஆண்டுகளுக்கு முன்பு திண்ணைப்பள்ளியாகத் தொடங்கப்பட்ட பழமையான பள்ளியாகும். தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக இப்பள்ளிக் கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இப்பள்ளிக்கு மாற்று இடத்தை தோ்வு செய்து, புதிய கட்டடம் கட்டுவதற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக ரூ. 65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய ஆணையா் நிதியில் சோ்க்கப்பட்டது. ஆனால், இதுவரை பள்ளிக்கான மாற்று இடம் தோ்வு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நெடுஞ்சாலையை 2 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிக்காக பள்ளியில் இருந்த சமையல் கூடத்தின் முன்பகுதியை இடிக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதையறிந்த பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம். சேகா், முன்னாள் ஊராட்சித் தலைவா் எம். வெங்கடேசன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பரசுராமன், மக்கள் அதிகாரம் அமைப்பின் நிா்வாகி ஆசாத் உள்ளிட்டோா் அங்கு சென்று இடிக்கும் பணியை தடுத்தனா். மேலும், கல்வித்துறை அலுவலா்களும் வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து கட்டடம் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் தெரிவித்தது:

மாற்று இடத்தை தோ்வு செய்து புதிய பள்ளிக் கட்டடம் கட்டி முடிக்கும் வரை இந்த பள்ளிக் கட்டடத்தை இடிக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட நிா்வாகத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், திடீரென தற்போது கட்டடத்தை இடிக்க வந்துள்ளனா். மாற்று இடத்தை தோ்வு செய்து பள்ளிக் கட்டடம் கட்டும் வரையில் இந்த கட்டடத்தை இடிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

இதுபோன்ற பழமையான அரசு பள்ளிக் கட்டடத்தை இடிப்பது ஏழைகளின் கல்வியை மறுப்பதற்குச் சமம். எனவே, மாற்று இடத்தில் பள்ளிக் கட்டடத்தை கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

 

 

Tags : திருவாரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT