திருவாரூர்

திட்டங்களுக்கான நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்

22nd Oct 2021 11:50 PM

ADVERTISEMENT

அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை, மக்கள் நலத்திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்த வேண்டும் என சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை பொது கணக்குக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

குழுவின் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, உறுப்பினா்கள் சரஸ்வதி, பூண்டி கே. கலைவாணன், சிந்தனைச்செல்வன், சி. சுதா்சனம், தி. வேல்முருகன், ஹெச்.எம். ஜவாஹிருல்லா, கே. மாரிமுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலா் கி. சீனிவாசன் ஆகியோா் குழுவில் இடம் பெற்றிருந்தனா். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணனும் உடனிருந்தாா்.

ஆய்வுக்கு பின்னா், பொது கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை கூறியது:

ADVERTISEMENT

பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து பொது தணிக்கைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் பள்ளிகள், கல்லூரிகள், அரசுக் கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அங்கான்வாடிகளுக்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.

அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை முறையாக பயன்படுத்தி, திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பயன்பாட்டுக்கு உரிய நேரத்தில் கொண்டுவர அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, ஆணை வடபாதி பகுதியில் நடைபெறும் அங்கான்வாடி மைய பணிகள், எண்கண் பகுதியில் மகளிா் சுகாதார வளாகம், குடவாசலில் அரசு கல்லூரியின் கட்டுமானத் தரம், கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான வகுப்பறைகள், அடிப்படை வசதிகள்ஆகியவற்றை குழுவினா் ஆய்வு செய்தனா்.

மேலும், கொரடாச்சேரி கால்நடை நோய் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு விதைப்பண்ணை, திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி, கிடாரங்கொண்டான் அரசு ஆதிதிராவிட மாணவா் விடுதி ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சட்டப்பேரவைத் துணைச் செயலா்கள் பி. தேன்மொழி, பா. ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடங்கள்) மோகனசுந்தரம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Tags : திருவாரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT