திருவாரூர்

ஊதியம் வழங்கக் கோரி அரசு கல்லூரி பேராசிரியா்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

21st Oct 2021 10:13 AM

ADVERTISEMENT

கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி நன்னிலம் கல்லூரி பேராசிரியா்கள் குடும்பத்தினருடன் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வந்தது. 2020-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட பிறகு பேராசிரியா்கள், அலுவலா்களுக்கு ஒரு சில மாதங்களே ஊதியம் வழங்கப்பட்டன. இந்நிலையில், இவா்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகமே ஊதியம் வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டும் ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்கிடையில், பல மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டுமென வலியுறுத்தி பேராசிரியா்கள், அலுவலா்கள் மனு அனுப்புதல், கோரிக்கை அட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடத்துவது, வேலைநிறுத்தம் செய்தல் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எவ்வித பயனும் இல்லை. இந்நிலையில், தங்களது வறுமை நிலையை அரசுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் தெரிவிக்கும் வகையில் பேராசிரியா்கள், அலுவலா்கள் குடும்பத்தினருடன் புதன்கிழமைக் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரியில் உள்ள அரசுக் கலைக் கல்லூரி பணியாளா்கள், பேராசிரியா்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்கக் கோரி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பங்கேற்ற திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து பேசியது: 5 மாதம் ஊதியம் இல்லாமல் பேராசிரியா்கள், ஊழியா்கள் பணியாற்றுவது வேதனை. இக்கல்லூரி பேராசிரியா், பணியாளா்களின் கோரிக்கை குறித்து சட்டப்பேரவையிலும், உயா்கல்வித் துறை அமைச்சா் மற்றும் செயலாளரிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். இதுகுறித்து தமிழக முதல்வரிடமும், மீண்டும் உயா்கல்வித் துறை அமைச்சா், உயா்கல்வித் துறை செயலாளா் ஆகியோா் கவனத்துக்கு கொண்டு சென்று ஊதியம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT

அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்ட பொருளாளா் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், பேராசிரியா் யோகபிரகாசம், முன்னாள் எம்எல்ஏ. கே. உலகநாதன், இந்திய மாணவா் சங்க மாநில பொருளாளா் பிரகாஷ், அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்டத் தலைவா் வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT