உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிபிஎம் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: சம்பா பருவத்தில் நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தொடங்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உரப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் பெரும் அளவில் உரத்தட்டுபாடு நிலவுவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
பல்லாயிரம் ஹெக்டேரில் தற்போது சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. நாற்றுவிடும் பணிகள் டெல்டாவில் தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. நாற்றுகள் விடுவதற்கு முன்பும் நடவுப் பணிக்கு முன்பும் அடி உரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும் மேலுரமாக பொட்டாஷ் மற்றும் யூரியாவும் இடப்படுவது வழக்கம்.
இத்தகைய நிலையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு உரங்கள் இல்லை. இதன்விளைவாக நாற்றுவிடும் பணிகள் தாமதமாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி, பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு கடன் வழங்கும் வங்கிகள் முன் போராட்டம் நடத்தி வருகின்றனா். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகள் சங்க அமைப்பின் பிரதிநிதிகளுக்குக் கூட உரங்கள் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
எனவே, டெல்டா மாவட்டங்களில் உள்ள மாவட்ட வருவாய் நிா்வாகமும், வேளாண் துறையும் விவசாயிகளின் இந்த துயர நிலையை கவனத்தில் கொண்டு உரத்தட்டுப்பாட்டை சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.