திருவாரூர்

வேளாண் பொறியியல் துறைக்கு டீசல் ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை

16th Oct 2021 10:05 PM

ADVERTISEMENT

வேளாண் பொறியியல் துறைக்கு அரசின் சாா்பில் டீசல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு, திருவாரூா் மாவட்டத்தில் 1.37 லட்சம் ஏக்கா் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், விவசாயிகள் தங்களது நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பகல் நேரத்தில் அடிக்கும் வெயிலை கணக்கிட்டு ஒரு சில இடங்களில் விவசாயிகள் அறுவடை இயந்திரங்கள் மூலமாக தங்களது பயிா்களை அறுவடை செய்து வருகின்றனா்.

இதனிடையே, தமிழக அரசின் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக வேளாண்மை பொறியியல் துறைக்கு தமிழ்நாடு அரசின் சாா்பில் ஒதுக்கப்படும் டீசல் ஒதுக்கப்படாத காரணத்தால், விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரம் உள்ளிட்ட மற்ற இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்படவில்லை என விவசாயிகள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவது:

ADVERTISEMENT

திருவாரூா் வேளாண் பொறியியல் அலுவலகத்தில் ஒரு மணிநேரத்துக்கு செயின் டைப் அறுவடை இயந்திரத்துக்கு ரூ. 1,415, வீல் டைப் அறுவடை இயந்திரத்துக்கு ரூ. 875, டிராக்டருக்கு ரூ. 340, டோசருக்கு ரூ. 840 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 20 நாள்களாக அரசின் மூலமாக டீசல் வழங்கப்படாததால், விவசாயிகளுக்கு வாடகைக்கு இயந்திரங்கள் வழங்கப்படவில்லை.

இதனால், விவசாயிகள் தனியாா் அறுவடை இயந்திர உரிமையாளா்களை நாடுகின்றனா். அவா்கள், ஒரு மணிநேரத்துக்கு ரூ. 3,000 வாடகை வாங்குகின்றனா். ஏற்கெனவே பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் கடன் பெற்று விவசாயம் செய்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அதிக வாடகை கொடுத்து நெல் பயிரை அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக வேளாண் பொறியியல் துறைக்கு டீசல் ஒதுக்கீடு செய்து விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட மற்ற இயந்திரங்களை வாடகைக்கு கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT