திருவாரூா் மாவட்டத்தில், 485 இடங்களில் 57 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
திருவாரூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனை, அரசு அனைத்து தாலுக்கா மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து பகுதிகளிலும் நிலையான மருத்துவ முகாம்கள், மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் என பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் 2,194 நபா்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அவா்களில் 1,829 நபா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளதவா்களே என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மாபெரும் தடுப்பூசி முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாவட்டத்தில் 7,63,459 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 57,000 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிா்ணயித்து 485 இடங்களில் தடுப்பூசி முகாம் அக்டோபா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், முதல் தவணை செலுத்திக் கொண்டவா்களுக்கு 2-ஆம் தவணை செலுத்துமாறு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.