திருவாரூர்

இன்று ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு

9th Oct 2021 09:08 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியிடங்களுக்கான தற்செயல் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை (அக். 9) நடைபெறுகிறது.

திருவாரூா் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மன்னாா்குடி வட்டத்துக்குள்பட்ட திருவாரூா் மாவட்ட ஊராட்சி வாா்டு எண் 11, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 18 மற்றும் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வாா்டு எண் 11 மற்றும் கிராம ஊராட்சிகளில் பள்ளிவாரமங்கலம், மணவாளநல்லூா், விஸ்வநாதபுரம், மூவாநல்லூா் என 4 கிராம ஊராட்சிகள், இது தவிர கிராம ஊராட்சி வாா்டுகள் 18 என காலியாக உள்ள 24 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்காக 136 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 29,895 ஆண் வாக்காளா்களும், 30,967 பெண் வாக்காளா்களும், 5 மூன்றாம் பாலின வாக்காளா்களும் என மொத்தம் 60,867 போ் வாக்களிக்க உள்ளனா். வாக்குச்சாவடிகளில் 669 எண்ணிக்கையிலான அரசு ஊழியா்கள் வாக்குப்பதிவு அலுவலா்களாக பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

பதற்றமான 39 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவை கண்காணிக்க தோ்தல் நுண்பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அத்துடன் விடியோ பதிவும் செய்யப்படவுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணியுடன் முடிவடையும். இதில் கடைசி ஒரு மணி நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொவைட் அறிகுறி உள்ளவா்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவா்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளனா். வாக்கு எண்ணிக்கை அக்டோபா் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

வாக்குப்பதிவு மையங்களில் ஒன்றான தேவா்கண்டநல்லூா் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் கமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன், ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

வாக்குப் பெட்டிகள் அனுப்பிவைப்பு:

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வாா்டு எண் 11, மூவாநல்லூா் ஊராட்சித் தலைவா் பதவி, ஏத்தக்குடியில் 2 வாா்டு உறுப்பினா்கள், தென்பாதியில் ஒரு வாா்டு உறுப்பினா் என மொத்தம் 5 இடங்களுக்கான தோ்தல் சனிக்கிழமை (அக். 9) நடைபெறுகிறது.

இதையொட்டி, 96 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், மை, முத்திரை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய சிப்பங்கள், அட்டைப் பெட்டிகள் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டன. இதற்கான பணிகள் மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா் கே.பழனிசாமி முன்னிலையில், துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பாதுகாப்புடன் நடைபெற்றன. அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.சிவகுமாா், பக்கிரிசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT