திருவாரூர்

பாலியல் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தேவை: குடவாசல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

23rd Nov 2021 01:54 PM

ADVERTISEMENT

நன்னிலம்: பாலியல் குற்றங்களைத் தடுத்திடும் வகையில் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி குடவாசல் அரசுக் கல்லூரியைச் சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமைச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்துக் கல்லூரி வாயிலிலிருந்து குடவாசல் அகர ஒகை ஆற்றுப்பாலத்தில் உள்ள திருவாரூர் கும்பகோணம் மாநில நெடுஞ்சாலையில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் துணை தலைவர் இரா.சூர்யா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில், கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள் காரணமாக, மாணவிகளின் தற்கொலைத் தொடர்கதையாகி வருகிறது. எனவே பாலியல் வன்கொடுமைகளினால் மாணவிகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடவும், தொடர்ந்து நடைபெறும் பாலியல் குற்றங்களை நிறுத்திடும் வகையிலும் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கிட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் தொடர்பான பாடங்களைச் சேர்க்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இரா.ஹரிசுர்ஜித், மாவட்டத் துணைச் செயலாளர் ப.சுகதேவ், மாவட்ட துணைத்தலைவர் வீ.சந்தோஷ், செயற்குழு உறுப்பினர் ம.முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், ஆகாஷ், காசினி, லிவிஸ்டியா, யோகேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். பின்னர் குடவாசல் வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர் ஆகியோரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சாலை மறியல் போராட்டம் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது. மாணவ,மாணவிகளின் சாலை மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர் கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

 

Tags : திருவாரூர் மாணவர்கள் சாலை மறியல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT