திருவாரூர்

மழை பாதிப்பு: நிவாரணம் கோரி அழுகிய நெற்பயிா்களுடன் விவசாயிகள் சாலை மறியல்

DIN

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே கனமழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி அழுகிய நெற்பயிா்களுடன் விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தான் பகுதியில் அண்மையில் பெய்த கனமழையால் வயல்களில் மழைநீா் தேங்கி ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கி நெல்மணிகள் முளைத்தும், அழுகியும் சேதமடைந்துள்ளன.

இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிறுவனம் முறையாக கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து பயிா்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை இணைந்து பயிா்ச் சேதம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் தமிழக அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருகவாழ்ந்தான் கடைவீதியில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு கோட்டூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ஜி.கே. அண்ணாதுரை தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் வி.எஸ்.ஆா். தேவதாஸ் முன்னிலை வகித்தாா். இதில், பெருகவாழ்ந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் அழுகிய நெற்பயிா்களுடன் பங்கேற்றனா்.

தகவலறிந்த கோட்டூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தங்கபாண்டியன், பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளா் ஹேமலதா ஆகியோா் அங்கு வந்து, விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என அவா்கள் உறுதியளித்ததை தொடா்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT