திருவாரூர்

எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் மறைவு

13th Jan 2021 03:51 AM

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பனை அடுத்த காவனூரில் வசித்துவந்த மூத்த எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு சிறப்பு அழைப்பாளருமான சோலை சுந்தரபெருமாள் (70) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை (ஜன. 12) காலமானார்.
 பள்ளி ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற சோலை சுந்தரபெருமாள் இடதுசாரி சிந்தனை கொண்டவர். வெண்மணி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய "செந்நெல்' நாவல் இலக்கியத் துறையில் மிகுந்த பாராட்டைப் பெற்றது.
 படைப்புகள்: 1989-இல் இவர் எழுதிய "தலைமுறைகள்' என்னும் முதல் சிறுகதை, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் குறித்தது. தொடர்ந்து, "உறங்க மறந்த கும்பகர்ணர்கள்', "ஒரே ஒரு ஊர்ல', "நஞ்சை மனிதர்கள்', "தப்பாட்டம்', "பெருந்திணை', "மரக்கால்', "தாண்டவபுரம்', "பால்கட்டு', "எல்லை பிடாரி', "வண்டல் உணவுகள்' ஆகிய நாவல்களையும், "மண் உருவங்கள்', "வண்டல்', "ஓராண்காணி', "ஒரு ஊரும் சில மனிதர்களும்', "வட்டத்தை மீறி', "மடையான்களும் சில காடைகளும்', "வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்', "கப்பல்காரர் வீடு' உள்ளிட்ட சிறுகதைகளையும், மனசு, குருமார்கள் ஆகிய குறுநாவல் தொகுப்புகள், "மருதநிலமும் சில பட்டாம்பூச்சிகளும்', "தமிழ் மண்ணில் திருமணம்' ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். இவரின் கவிதைத் தொகுப்பாக வெளிவந்தது "தெற்கே ஓர் இமயம்'.
 தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர். பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் இவரின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
 நாட்டுப்புற தெய்வங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டவர். தமிழகத்தின் சிறந்த கலை இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் என இலக்கிய விமர்சகர்களால் பாராட்டப்பட்ட சோலை சுந்தரபெருமாளின் "செந்நெல்' நாவல், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 மறைந்த சோலை சுந்தரபெருமாளுக்கு பத்மாவதி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
 அவரின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை பிற்பகல் திருவாரூரை அடுத்த காவனூரில் நடைபெறுகின்றன. தொடர்புக்கு: 9442446869.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT