திருவாரூர்

புதிய சம்பா ரக விதை நெல் ரகம் விரைவில் அறிமுகம்: வேளாண் விஞ்ஞானிகள்

3rd Jan 2021 04:10 PM

ADVERTISEMENT

டெல்டா மாவட்டங்களுக்கேற்றப் புதிய சம்பா ரக நெல் விதை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென, வேளாண் விஞ்ஞானிகள், நன்னிலம் அருகே செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, பண்டாரவடைத் திருமாளம் கிராமத்தில், கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தின் மூலம், முன்னோடி விவசாயி ச.துரைசாமிக்குச் சொந்தமான நெல்வயலில், புதிய விதைநெல் ஆராய்ச்சி முறையில் சாகுபடிச் செய்யப்பட்டு வருகிறது. இதனை ஞாயிற்றுக்கிழமைப் பார்வையிட்டு ஆய்வு செய்த, விஞ்ஞானிகளான, கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் மூ.இரவீந்திரன் மற்றும் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் இரா.சுரேஷ் ஆகியோர், ஞாயிற்றுக்கிழமைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

பின்னர் பண்டாரவடைத் திருமாளம் கிராமத்தில், செய்தியாளர்களிடம் பேசும் போது அவர்கள் தெரிவித்ததாவது, கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தின் மூலம், பண்டாரவடைத் திருமாளம் கிராமத்தில் உள்ள முன்னோடி விவசாயி துரைசாமியின் வயலில், டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்ற சம்பா ரக நெல்லான ஆடுதுறை 51 என்ற புதிய விதை நெல், விதை ஆராய்ச்சிக்காக சாகுபடிச் செய்யப்பட்டு வருகிறது. இந்த விதை நெல்லை முன்னோடி விவசாயி துரைசாமி, வேளான் பல்கலைக்கழகம் மற்றும் நெல் ஆராய்ச்சி மையம் சார்பாக வழங்கப்பட்ட அறிவுரைகளை அனைத்தையும் பின்பற்றி மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்துள்ளார். 

ADVERTISEMENT

இந்த ரகமானது, அதிக மழைப்பொழிவு பெறக்கூடிய, டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்கு ஏற்ற நீண்ட கால நெல் ரகம். இதனுடைய வயது 155 நாள். இந்த நெல் சாகுபடியில், வழக்கமாக டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் பூச்சித் தாக்குதல் என்பது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அதேபோல இரசாயன உரங்களின் தேவையும் குறைந்துள்ளது. எனவே விவசாயிகள் குறைந்த செலவில், நிறைந்த மகசூல் பெறலாம். மேலும் கனமழையினையும் தாங்கக் கூடிய வகையில் இந்தப் பயிர், டெல்டா மாவட்டத்தில் செழிப்பாக நல்ல மகசூலைத் தரக்கூடிய வகையில் வளர்ந்துள்ளது. மழைக்காலங்களில் சாய்ந்து விடாமல், நிமிர்ந்து நிற்கக் கூடிய வகையைச் சார்ந்தது. 

அத்துடன் கர்நாடகப் பொன்னி, ஆந்திராப் பொன்னி போன்ற நெல் ரகங்களை விட சிறப்பான இந்த ரகம், பொதுமக்களின் சாப்பாட்டு உபயோகத்திற்கு மிகவும் ஏற்றது. அதேபோல சன்னரகத்தைச் சேர்ந்த இந்த நெல் சாகுபடியில், அதிக விளைச்சல் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம். மேலும் இரசாயன உரங்களின் தேவை அதிகமின்றி, இயற்கை உரங்களைப் பயன்படுத்தியே, இந்தப் பயிரை நல்லத் தரமாக வளர்க்க முடியும். இந்த நெல்ரகம், டெல்டா மாவட்டங்களின் ஒரு போக சம்பா சாகுபடிக்கு ஏற்ற நீண்ட கால நெல் ரகம் ஆடுதுறை 51. ஆந்திராப் பொன்னி மற்றும் கர்நாடகப் பொன்னி நெல் ரகங்களை, நமது டெல்டா மாவட்ட சூழ்நிலைக்கேற்ற வகையில் சாகுபடி செய்ய முடியாது. 

மேலும் அந்தப் பயிர்களில் அதிக பூச்சித் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து பூச்சிக்கொல்லி அடிக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும். ஆனால் ஆடுதுறை51 நெல் ரகத்தில் பூச்சித் தாக்குதல் என்பது மிகவும் குறைவாக உள்ளது. விவசாயிகள் லாபம் பெறக்கூடிய வகையில் அதிக மகசூல் தரக்கூடிய வகையிலும், பொதுமக்கள் விரும்பிச் சாப்பிடக்கூடிய ஒரு நெல் ரகமாகவும் இது இருக்கும். இந்த நெல் விதை ஆராய்ச்சி முறைச் சாகுபடியில், எதிர்ப்பார்த்த வெற்றியடைந்தவுடன் விரைவில், இந்த ரகம் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும். இத்துடன் ஏடி 12132 சிபி 14065 ஆகிய மத்தியகால வளர்ப்புகளும் நெல் விதை ஆராய்ச்சிக்காக, பரிசோதனை முறையில் பயிரிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

முன்னதாக விதை ஆராய்ச்சி முறையில் பயிரிடப்பட்டுள்ள வயல்களைப் பார்வையிட்டு, நல்ல முறையில் சாகுபடிச் செய்துள்ள விவசாயிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து, அறிவுரைகளை வழங்கினர்.

Tags : Tiruvarur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT