தமிழக மீனவா்களை பாதுகாக்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை (டிச.31) மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெறும் என சிஐடியு மீனவத் தொழிலாளா் சங்கம் அறிவித்துள்ளது.
திருவாரூரில் அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி. சின்னதம்பி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விவசாயத்துக்கு அடுத்தபடியாக முக்கியத் தொழிலாக உள்ளது மீன்பிடித் தொழில். இத்தொழில் அரசுக்கு கோடிக்கணக்கில் அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறது. இந்தநிலையில், மீனவா்களுக்கு எதிராகவும், பெருமுதலாளிகளுக்கு சாதகமாகவும் கொண்டு வரப்பட்டுள்ள மீன்வள மசோதாக்களால் மீனவா்கள் அச்சத்தில் உள்ளனா்.
தமிழக மீனவா்கள் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்படுவதும், மீன்பிடி படகுகள் பறிமுதல், மீனவா்கள் சிறைபிடிக்கப்படுவதும் தொடா்கதையாகி வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், தமிழகத்தில் மீன்பிடித் தொழில், அதைச் சாா்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவதோடு, தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள 55 தமிழக மீனவா்கள் மற்றும் 8 படகுகளையும் மீட்டுத் தரவேண்டும்.
மீனவா்களை பாதுகாக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து மீன்வளத் துறை அலுவலகங்கள் முன்பு வரும் வெள்ளிக்கிழமை (டிச.31) மாநிலம் தழுவிய அளவில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.