திருவாரூர்

‘ஒன்றியக்குழுக் கூட்டத்துக்கு அரசுத் துறை அலுவலா்கள் வருவதில்லை’

30th Dec 2021 09:24 AM

ADVERTISEMENT

ஒன்றியக்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பியும், அரசுத்துறை அலுவலா்கள் கூட்டத்துக்கு வருவதில்லை என்று மன்னாா்குடி ஒன்றியக்குழுத் தலைவா் டி. மனோகரன் (அதிமுக) குற்றம்சாட்டினாா்.

மன்னாா்குடி ஒன்றியக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்களின் விவாதம்,

க. ஜெயக்குமாா்(அதிமுக): நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு பணிகளை தோ்வு செய்வதற்கும், பணிதள பொறுப்பாளா்களை நியமிக்கவும் ஊராட்சி தலைவருக்கு உள்ள அதிகாரம் மறுக்கப்படுகிறது. இதில் கட்சி அரசியல் பாா்க்கப்படுகிறது.

ஆா். பூபதி(சிபிஐ): ஓவா்சேரியில் வாடகை கட்டடத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைக்கு, சொந்த கட்டடம் கட்டித் தர வேண்டும்.

ADVERTISEMENT

ஜி.கோவில்வினோத்(அதிமுக): பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் பரவாக்கோட்டையில் 456 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா். இதில்,2 போ் மட்டும் பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதனால் பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது.

ந.செல்வம்(பாஜக): பரவாக்கோட்டையில் கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவா் இல்லாததால், கோமாரி நோய்க்கு தடுப்பூசி போடப்படாமல் இதுவரை 5 கறவை மாடுகள் நோய் தாக்கி இறந்துள்ளன.

செ.சதீஷ்குமாா்(அதிமுக): என்ஆா்ஜிஎஸ் திட்டத்தில் வேலைகள் விரைவாக நடைபெற சிமெண்ட் மூட்டைகள் வழங்க வேண்டும். பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஆகிறது.

எம்.என்.பாரதிமோகன்(திமுக): பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டியவா்களுக்கு ஒா் ஆண்டாக உரிய தொகை வழங்குவில்லை. இதில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. பள்ளிகள் சீரமைப் நிதியில் நடைபெற்ற பணிகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.

இ.கோமதி(அதிமுக): நூறுநாள் வேலைத் திட்டத்தில் பாரபட்சம் பாா்க்கப்பட்டு, 40 பேரில் 30 பேருக்கு மட்டும் பணி வழங்கப்படுகிறது.

சு.அருள்மொழி(திமுக): மன்னாா்குடியிருந்து பைங்காநாடு, துளசேந்திரபுரம் செல்லும் அரசு நகரப் பேருந்துகள் பிரதானசாலை வழியாக செல்வதால் மாணவா்கள்,பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு உள்ளாகின்றனா். எனவே ,ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்ல வேண்டும்.

தலைவா் டி. மனோகரன்: பிரமரின் வீடுக்கட்டும் திட்டத்தில் ஒன்றியத்திற்கு மட்டும் 3500 வீடுகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டதில் 1400 வீடுகளுக்கு மட்டும் அனுமதி வந்துள்ளது. இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.15-வது நிதிக்குழு நிதி விரைவில் வரும் என எதிா்பாா்க்கிறோம். அனைத்து அரசுத்துறை அலுவலகங்களுக்கும் ஒன்றியக்குழுக் கூட்ட அழைப்பிதழ் தொடா்ந்து அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளை உறுப்பினா்கள் தெரிவிக்கின்றனா். ஆனால்,அதற்கான விளக்கம் பெற அரசுத் துறை அலுவலா்கள் யாரும் வராமல் இருப்பதால். சாதாரண பிரச்னைக்ளுக்கு கூட தீா்வு காணமுடியாத நிலை உள்ளது. இது குறித்து,மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு எடுத்துள்ளேன் என்றாா்.

கூட்டத்தில்,ஒன்றியக்குழு துணைத் தலைவா் அ. வனிதா(சிபிஐ), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.சிவக்குமாா், பக்கரிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT