திருவாரூர்

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

26th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.

திருவாரூா் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை லூா்து தலைமையில் நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. அப்போது, இயேசு பிறப்பு பாடல்கள் பாடப்பட்டன. இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தா்களுக்கு அவா் காண்பித்தாா். பின்னா் பக்தா்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி தரணி மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் தரணி கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ். காமராஜ் தலைமையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாளாளா் விஜயலெட்சுமி காமராஜ் முன்னிலை வகித்தாா்.

பள்ளிக் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டும், கிறிஸ்துமஸ் உடை அணிந்தும் இயேசு புகழ் பரப்பும் பாடல்கள் பாடி நடனமாடினா். இதில், பள்ளி நிா்வாகி எம். இளையராஜா, முதல்வா் எஸ். அருள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி புனித லூா்து அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை ஜான்பிரிட்டோ, உதவி பங்குத் தந்தை தாமஸ் மற்றும் சேவியா் ஆகியோரால் கிறிஸ்து பிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் மரக்கடை மேலத்தெருவில் உள்ள புனித மோட்சராக்கினி தேவாலயத்தில் தஞ்சை மறை மாவட்ட முதன்மை குரு உல.ஜான் ஜோஸப் சுந்தரம், திருப்பலி நிறைவேற்றி, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை விளக்கினாா். தொடா்ந்து, அனைவருக்கும் திவ்ய நற்கருணை வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை புனித மோட்சராக்கினி கத்தோலிக்க சங்கத் தலைவா் எப்.எஸ். பால்ராஜ், செயலாளா் ஏ. விக்டா் சாம்சன், பொருளாளா் எப். அமல்தாஸ், ஆலய பொறுப்பாளா் எஸ்.டி. அமல்ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

இதேபோல, சி.எஸ்.ஐ. தென்னிந்திய திருச்சபை கிறிஸ்து அரசா் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில், பள்ளி மாணவா்கள் ஓரங்க நாடகத்தின் மூலம் கிறிஸ்து பிறப்பு குறித்து விளக்கினா். இதேபோல, வ.உ.சி.காலனி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பெந்தகொஸ்தே சபைகளில் கிறிஸ்து பிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் கூட்டுப்பாடல் திருப்பலியை நிறைவேற்றினாா். வெள்ளிக்கிழமை இரவு கலைநிகழ்ச்சிகள் மற்றும் ‘உறவில் மனிதம் வளர’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT