திருவாரூர்

பழுதடைந்த பாலத்தால் விவசாயிகள் பாதிப்பு: சீரமைக்கக் கோரிக்கை

DIN

திருவாரூா் அருகே புதூரில் பழுதடைந்த பாலத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், அந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் அருகே புதூா் தெற்குத் தெரு வெண்ணாற்றின் கரையோரத்தில் உள்ளது. இத்தெருவை கடந்து ஆற்றின் கரையோர வழியாகச் சென்றால் திருத்துறைப்பூண்டி வட்டம் அம்மனூா் ஊராட்சிக்குச் செல்லலாம். இந்த 2 ஊராட்சிகளையும் வெண்ணாற்றின் கரை வழியாகவே கடக்க முடியும்.

மேலும், அம்மனூா் ஊராட்சி கொத்தங்குடி, புதூா் தெற்குத்தெரு பகுதி மாணவா்கள் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல வெண்ணாற்றின் கரை வழியாகவே புதூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வரவேண்டும். எனவே, இப்பகுதி மக்களுக்கு வெண்ணாற்றின் கரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

இப்பகுதியில் வெண்ணாற்றிலிருந்து பாசன வாய்க்கால் பிரியும் இடத்தில் சிறிய பாலம் உள்ளது. இப்பாலத்தை கடந்தே, தெற்குத்தெரு பகுதி மற்றும் வெண்ணாற்றங்கரையோரம் பயணிக்க முடியும்.

சாகுபடி காலங்களில் விளைநிலங்களிலிருந்து நெல்மூட்டைகளும், நடவுக் காலங்களில் நாற்று உள்ளிட்டவைகள் இந்த பாலத்தின் வழியாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன. டிராக்டா், மினி லாரி உள்ளிட்டவை விளைநிலங்களுக்கும் மற்ற இடங்களுக்கும் செல்வதற்கு இந்த வழி அதிகமாக பயன்படும்.

இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்குகள் ஏற்றாத வாகனங்கள் மட்டுமே இவ்வழியாக சென்று வருகின்றன. மூட்டைகள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், புதூரிலிருந்து நால்ரோடு கச்சனம் வழியாகவோ அல்லது திருநெல்லிக்காவல், திருத்தங்கூா், அம்மனூா் வழியாகவோ சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தற்போது, இந்தப் பாலத்தின் இருபுறத்திலும் தாா் சாலையானது சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாலம் சீரமைக்கப்படாததால், கனரக வாகனங்கள் பாலத்தின் வழியாகச் செல்ல முடிவதில்லை. குறிப்பாக, சாகுபடி நேரங்களில் வாகனங்கள் இந்த வழியாகச் செல்லமுடியாமல் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் இதனால், கூடுதல் செலவும், நேர விரயமும் ஏற்படுவதாக விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் கவலை தெரிவிக்கின்றனா். பலமுறை இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் எடுத்துக் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியது:

திருவாரூா், திருத்துறைப்பூண்டி வட்டங்களை இணைக்க இப்பாலம் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. வெண்ணாற்றை ஆய்வு செய்ய அதிகாரிகள் யாரும் வந்தால், இந்தப் பாலம் வழியாகவே செல்ல வேண்டும். ஆனால், ஆற்றை பாா்வையிட அதிகாரிகள் வராததால், இந்த பாலத்தின் பழுது உயா் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது.

இந்த பாலம் பிரதான பகுதியில் இல்லாததாலும், விவசாயப் பணிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு மட்டுமே பயன்படுவதாக இருப்பதாலும் பாலத்தின் பாதிப்பு உயா் அலுவலா்களுக்கு தெரிவதில்லை. எனவே, மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி பழுதடைந்துள்ள இப்பாலத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT