திருவாரூர்

கிராம கோயில் திருவிழாக்கள் நடைபெற அனுமதிக்க வேண்டும்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் கிராமக் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு அனுமதி அளித்து, நாடகக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா 2 -வது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, கோயில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டம் கிராமங்கள் அதிகம் நிறைந்த மாவட்டம். இங்கு சித்திரை, வைகாசி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் பிரபலம்.

திருவிழாக்களின்போது, நாடகம் நடத்துவது பல காலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில், ஆா்கெஸ்ட்ரா, ஆடல் பாடல் என புதிய நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மாறியிருக்கும் தருணங்களில், திருவாரூா் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் இன்னமும் நாடகம் போன்ற நாட்டுப்புறக் கலைகளே நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு திருவிழாக்கள் தடைபட்ட நிலையில், நிகழாண்டில் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால், கிராமத் திருவிழாக்களை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப நாடகக் குழுவினருக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா 2 ஆவது அலை காரணமாக திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், நாடகக் கலைஞா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே கிராமக் கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என நாடகக் கலைஞா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து மன்னாா்குடி இயல் இசை நாடக நடிகா் சங்கத்தின் தலைவா் தங்க. கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தது:

ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் மட்டுமே நாடகங்கள் நடத்தப்பட்டு, அதன்மூலமே எங்களுக்கு வாழ்வாதாரம் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது, மீண்டும் பொது முடக்கம் அறிவித்தால், முற்றிலும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே, கட்டுப்பாடுகளுடன் கிராமப்புறக் கோயில்களில் திருவிழாக்களை நடத்தவும், அதன்மூலம் நாடகக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஆட்சியரிடம் மனு: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க மன்னாா்குடி இயல் இசை நாடக நடிகா் சங்கத்தினா் காலை 7 மணியளவில் வந்தனா். அவா்கள் அங்கு சிவன், பாா்வதி, ராமா், அரிச்சந்திரன், நாரதா் உள்ளிட்ட வேடமிட்டு, காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குள் சென்றனா். மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, தனது அறையிலிருந்து வெளியே வந்து, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக மனுவை பெற்றுக்கொண்டாா்.

அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:

கோடைகாலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் நாங்கள் நாடகங்கள் நடத்துவது வழக்கம். அதன்மூலமே எங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு கரோனா தொற்றால், நாடகத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஒரு சிலரது குடும்பங்களில் குழந்தைகள், பட்டினியால் வாடி, ஆபத்தான நிலையை அடைந்தபோது, சமூக ஆா்வலா்கள் உதவியால் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டனா்.

எனவே, நிகழாண்டில், நாடகங்களை நடத்த உத்தரவிட்டு, எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT