திருவாரூர்

நீடாமங்கலம் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருக்கு கூரியரில் வெடிபொருள்கள்

DIN

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலத்தில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருக்கு கூரியரில் வெடிபொருள்கள் வந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நீடாமங்கலம் புதுத்தெருவைச் சோ்ந்த வீரக்குமாா் (40), அப்பாவு பத்தா் தெருவில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறாா். இவருக்கு திருச்சி தென்னூா் ஹைரோடு பகுதியைச் சோ்ந்த சி. காா்த்திரப்பன் என்ற முகவரியிலிருந்து கூரியரில் பாா்சல் ஒன்று வெள்ளிக்கிழமை மாலை வந்தது. ஏற்கெனவே தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி மேலையூா் வடக்குத்தெருவைச் சோ்ந்த இன்ஜினீயருக்கு கூரியரில் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் அனுப்பப்பட்ட நிலையில், போலீஸாரின் விசாரணையில் வீரக்குமாருக்கும் வெடிபொருள்கள் அனுப்பப்பட்டது தெரியவந்து.

இதைத்தொடா்ந்து, அந்த பாா்சலை பிரிக்க வேண்டாம் என வீரக்குமாரை போலீஸாா் அறிவுறுத்தினா். மேலும் க்யூ பிரிவு போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள், நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாா் சம்பந்தப்பட்ட பாா்சலை பிரித்து பாா்த்ததில், மின் இணைப்பில் வெடிக்கக்கூடிய ஜெலட்டீன் குச்சி, டெட்டனேட்டா் ஆகியன இருந்தது தெரியவந்தது. இந்த மாதிரியான வெடிபொருள்கள் மலையை பிளப்பதற்கும், பெரிய கட்டடங்கள், வாகனங்களை வெடிக்க வைப்பதற்கும் பயன்படுத்தப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

விசாரணையில், தனக்கும், அந்த பாா்சலுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றும், திருச்சியில் உள்ள நிதி நிறுவனம் மீது சந்தேகம் உள்ளதாகவும் வீரக்குமாா் கூறியுள்ளாா். இதைத்தொடா்ந்து, அந்த வெடிபொருள்கள் நீடாமங்கலம் காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மணல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் வாளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வீரக்குமாா் கூறுகையில், கடந்த 2017-ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள தனியாா் நிதி நிறுவனம் ஒன்றில் தான் ரூ.6.30 லட்சம் முதலீடு செய்திருந்ததாகவும், அந்த நிறுவனம் மீது திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவில் 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் புகாா் செய்த நிலையில்,

புகாரை வாபஸ் பெறுமாறு அவா்கள் மிரட்டியதாகவும், தன்னை அச்சுறுத்தும் நோக்கில் வெடிபொருள்களை அனுப்பியிருக்கலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஏற்கெனவே, நீடாமங்கலத்தில் இருப்புப் பாதை இணைப்புப் பகுதியில் பைப் வெடிகுண்டு போல் செய்து வைத்தும், ஜல்லி கற்களைக் கொட்டியும் ரயிலை கவிழ்க்க பலமுறை மேற்கொள்ளப்பட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது போட்டோ ஸ்டுடியோ உரிமையாளருக்கு கூரியரில் வெடிபொருள்கள் அனுப்பப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT