திருவாரூர்

நீடாமங்கலம் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளருக்கு கூரியரில் வெடி பொருள்: காவல்துறை விசாரணை

DIN

நீடாமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் வீரக்குமார் என்பவருக்கு கூரியரில் வந்த பார்சலில் வெடி பொருள்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்து கைப்பற்றினர். 

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுத்தெருவில் வசித்து வருபவர் சுந்தரம் மகன் வீரக்குமார்(40). இவர் நீடாமங்கலம் அப்பாவு பத்தர் சந்து பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருக்கு திருச்சியிலிருந்து கூரியர் பார்சல் ஒன்று வெள்ளிக்கிழமை மாலை வந்தது. இந்த பார்சல் திருச்சி தென்னூர் ஹைரோடு பகுதியைச் சேர்ந்த 10.சி.வெள்ளாத்தெரு பகுதி சி.கார்த்திரப்பன் என்ற விலாசத்திலிருந்து வந்துள்ளது. பார்சலை பெற்ற வீரக்குமாரை அதனை பிரிக்க வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தினர். பின்னர் க்யூபிரிவு காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள், நீடாமங்கலம் காவல்ஆய்வாளர் சுப்ரியா மற்றும் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட பார்சலை ஆய்வு செய்தனர். 

பார்சலை பிரித்து பார்த்ததில் பேட்டரி(அ)மின் இணைப்பில் வெடிக்க கூடிய ஜெலட்டீன் குச்சி 1,125 கிராம் எடைகொண்ட டெட்டனேட்டர் 1 இருந்ததை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த மாதிரியான வெடி குண்டுகள் மிகப்பெரிய மலையை பிளப்பதற்கும், பெரிய கட்டடங்கள், வாகனங்களை வெடிக்கக் கூடிய சக்திவாய்ந்தது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. உடனடியாக காவல்துறையினர் வீரக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தியதில் தனக்கும் பார்சலுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை, திருச்சியில் உள்ள நிதி நிறுவனம் மீது சந்தேகம் உள்ளது என்றதாக தெரிகிறது. உடனே அந்த பார்சலில் உள்ள வெடி குண்டுகளை எடுத்து நீடாமங்கலம் காவல் நிலையத்தில் உள்ள மணல் நிரப்பிய பிளாஸ்டிக் பக்கட்டில் பத்திரமாக பாதுகாப்பில் வைத்தனர். இதனால் நீடாமங்கலத்தில் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நீடாமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இதேபோல் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி மேலையூர் வடக்குத்தெருவைச் சேர்ந்த கருணாநிதி மகன் அறிவழவகன் (28) என்ஜீனியர். என்பவருக்கும் கூரியரில் ஒரு பார்சல் வந்தது. அதில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதனை காவல்துறையினர் கண்டறிந்து விசாரணை நடத்தியதின் அடிப்படையில் நீடாமங்கலத்திற்கும் கூரியர் பார்சல் வந்துள்ளது தெரியவந்ததாக கூறப்படுகிறது. வீரக்குமார் தனக்கு மர்ம பார்சல் கொரியரில் வந்துள்ளது தொடர்பாக புகார் மனு ஒன்றினையும் அளித்துள்ளார். 

இது தொடர்பாக போட்டோ ஸ்யூடியோ உரிமையாளர் வீரக்குமார் கூறியதாவது- கடந்த 2017ம் ஆண்டு திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தான் 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்ததாகவும், நிதி நிறுவனம் மீது திருச்சி பொருளாதார குறப்பிரிவில் 2019ம் வருடம் மார்ச் மாதம் புகார் செய்துள்ளதாகவும். புகாரை வாபஸ் பெற தன்னிடம் மிரட்டி வந்ததாகவும் கூறினார். அவர்கள் தன்னை அச்சுறுத்துவதற்காக வெடிபொருள்களை அனுப்பியிருக்கலாம் என்றார். இருப்பினும் நீடாமங்கலத்தில் ரயில்வே தண்டவாள இணைப்புப் பகுதியில் பைப் வெடிகுண்டு போல் செய்து வைத்தும் ஜல்லி கற்கள் தண்டவாளத்தில் வைத்தும் ரயிலை கவிழ்க்க ஏற்கனவே பல முறை சதி முயற்சிகள் நடந்துள்ளது. 

ரயிலுக்கு சிக்னல் கிடைக்காததால் அது கண்டறியப்பட்டு அந்த பொருள்கள் அகற்றப்பட்ட பின் ரயில்கள் சென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கூரியர் பார்சலில் வெடி பொருள்கள் வந்த சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தகவலை அறிந்த பொதுமக்கள் பலரும் கவலை தெரிவிக்கின்றனர். நீடாமங்கலத்தில் நாசவேலையில் ஈடுபட ஏதேனும் கும்பல் முயற்சி செய்துவருகிறதா என்பது குறித்தும் உளவுப்பிரிவு காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT