திருவாரூர்

மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு: பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் வரவில்லை

18th Sep 2020 05:25 PM

ADVERTISEMENT

மத்தியப் பல்கலைக்கழகச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு வெள்ளிக்கிழமை துவங்கியது. இதில் பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட, இந்தியா முழவதும் உள்ள 18 பல்கலைக்கழகங்களில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த தேர்வு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வுக்காக, திருவாரூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரி, வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி, டிரினிடி அகாடமி சிபிஎஸ்சி பள்ளி, ஜி ஆர் எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. 

இந்த மையங்களில் 750 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான வசதிகள் செய்யப் பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் கூடுதலாக விவேகானந்தா வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி பள்ளியிலும், தேர்வு மையம் அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை மதியம் நடைபெறும் நுழைவுத்தேர்வை 1200 மாணவர்கள் எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நுழைவுத்தேர்வு  காலை 10 மணி முதல்  12 மணி வரையிலும்,   மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும்  நடைபெறுகிறது. இந்த தேர்வின் மூலம் இளங்கலை, முதுநிலை, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்காக மாணவர்கள் மத்தியப் பல்கலைகழகங்களில் சேர்வதற்காக நுழைவுத்தேர்வு எழுதுகிறார்கள்.

கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, அரசின் அறிவிப்பின்படி அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். திருவாரூரில் உள்ள மையங்களைத் தவிர, தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், மதுரை, நாகர்கோவில், திருச்சி ஆகிய மையங்களிலும் தேர்வு நடைபெறுவதாகவும், வெள்ளிக்கிழமைக் காலை திருவாரூர் பகுதியில் நடைபெற்ற நுழைவுத்தேர்வில் 47 சதவீத விண்ணப்பதாரர்களும், மதியம் நடைபெற்ற நுழைவுத்தேர்வில் 55 சதவீத விண்ணப்பதாரர்களும் கலந்துகொண்டதாக திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.இரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
 
 

ADVERTISEMENT

Tags : Tiruvarur
ADVERTISEMENT
ADVERTISEMENT