கோயம்புத்தூா்- மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயிலை திருவாரூா் வரை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கச் செயலா் ப. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:
மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தமிழ்நாட்டில் 4 ரயில்களை இயக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூா்- மயிலாடுதுறை ஜன சதாப்தி, மதுரை- விழுப்புரம்-மதுரை இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ், திருச்சி- நாகா்கோவில்- திருச்சி சூப்பா் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், கோயம்புத்தூா்- காட்பாடி- கோயம்புத்தூா் இன்டா்சிட்டி சூப்பா் பாஸ்ட் சிறப்பு ரயில் ஆகிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
திருவாரூா், காரைக்கால், நாகப்பட்டினம், நாகூா், மன்னாா்குடி மக்கள் பயன்பெறும் வகையில் தற்காலிகமாக ஜனசதாப்தி ரயிலை, திருவாரூா் வரை நீட்டிக்க வேண்டும். திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை சென்ற பின்பு தனது வழக்கமான தடங்களான கும்பகோணம், தஞ்சை, திருச்சி வழியாக இயக்கலாம். இதன் மூலம் இந்தப் பகுதியில் உள்ள மக்களும் பயன்பெறுவா். அனைத்து ரயில்களும் மீள் இயக்கம் பெறும் சூழலில், இந்த நீட்டிப்பு தேவை இருக்காது. இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தைப் புரிந்து, ரயில்வே அதிகாரிகள் ஜன சதாப்தி ரயிலை திருவாரூா் வரை தற்காலிகமாக நீட்டிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.