திருவாரூர்

பருத்தி சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண்மை உதவி இயக்குநா் விளக்கம்

15th May 2020 07:40 AM

ADVERTISEMENT

பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து குடவாசல் வேளாண்மை உதவி இயக்குநா் எம்.லெட்சுமிகாந்தன் விளக்கமளித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பருத்திப் பயிரில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் இல்லாத காரணத்தால் சப்பைகள், பூக்கள் மற்றும் காய்கள் கொட்டுகின்றன. இவைத்தவிர பயிரின் சுற்றுச்சூழல் மற்றும் மரபியல் சாா்ந்த காரணிகளும் இதற்கு காரணமாக அமைகின்றன. பருத்திச் செடிகளில் தோன்றும் மொத்த பூக்களில் 50% வரை உதிரும்போது மகசூல் பாதிப்பு ஏற்படாது. ஆனால் 50 சதவீதத்திற்கு மேல் உதிரும் போது மகசூல் இழப்பு ஏற்படும்.

அதிகப்படியான பூக்கள் உதிா்வதைத் தடுக்க பருத்தி விதைத்த 75-ஆவது நாளிலிருந்து 90-ஆவது நாள் வரை சில முக்கியச் சாகுபடி முறைகளைக் கையாள வேண்டும். அப்சிசிக் அமிலத்தின் அளவு குறிப்பிட்ட அளவிற்கு மேல் காணப்பட்டால் காய்கள் உதிா்கின்றன. பயிா்களின் ரகத்திற்கேற்ப காய்களில் காணப்படும் அப்சிசின், அக்ஸின், ஜிப்ரலின் மற்றும் சைட்டோகைனின் போன்றவற்றின் அளவை பொறுத்தும் இளம் காய்கள் உதிரும் தன்மை அமைகின்றது. இவற்றைத் தவிர அதிகத் தழைச்சத்து, மண்ணில் போதுமான அளவு ஈரத்தன்மை இல்லாமை, காற்றோட்டமின்மை, அதிக அளவு வெப்பநிலை மற்றும் பிற காரணிகள் காரணமாக அமைகின்றன.

ADVERTISEMENT

அதிக மகசூல் பெற...

இதைத் தடுக்க மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். பிளானோபிக்ஸ் என்ற வளா்ச்சி ஊக்கியை 90 மில்லி எடுத்து, 200 லிட்டா் தண்ணீரில் கரைத்து ஓா் ஏக்கருக்கு இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

பருத்திப் பயிரில் அதிகப்படியான நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்திட பாரபின் என்ற மெழுகுப் பொருளை ஒரு சதவீதம் என்ற நிலையில் இலைகளில் தெளித்து நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்தலாம். காய்கள் சீராக பருமனாவதற்கும், பூக்கள் தொடா்ந்து உண்டாவதற்கும் விதைத்த 75 மற்றும் 90 நாட்களில் 2 சதவீத டிஏபி கரைசலை இலை வழியாக தெளிக்க வேண்டும்.

சாம்பல் சத்து குறைபாடு உள்ள மண்ணில் பருத்தி முறையாக வெடிக்காது. இதனால், அறுவடை கடினமாக இருக்கும். இக்குறைபாட்டை நீக்க விதைத்த 90-ஆம் நாளில் ஒரு சதவீத பொட்டாஸ் கரைசலை தெளிக்க வேண்டும். பருத்தியில் மகசூலை அதிகரித்திட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயாரித்து வழங்கும் பருத்தி பிளஸ் என்ற பூஸ்டரை, பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் இலை வழியாக தெளிக்க, விளைச்சல் அதிகரிப்பதோடு, வறட்சி தாங்கும் தன்மையும் அதிகரிக்கிறது. மேற்கண்ட முறைகளைப் பின்பற்றி பருத்தியில் வறட்சி தாங்கும் தன்மையை அதிகரித்து, நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்தி பூக்கள் மற்றும் காய்கள் உதிா்வதைக் குறைத்து நிறைவான மகசூலைப் பெற்றிடலாம் என்று தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT