திருவாரூர்

தாய் சேய் நல மருத்துவமனையை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் முடிவை கைவிடக் கோரிக்கை

30th Mar 2020 02:16 AM

ADVERTISEMENT

திருவாரூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையை, கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் முடிவை கைவிட்டு, வேறு இடங்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தெரிவித்தது:

திருவாரூரின் மையப்பகுதியில் அரசு தாய் சேய் நல மகப்பேறு மருத்துவமனையானது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை கரோனா வைரஸ் சிறப்பு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிகிறது. திருவாரூரில் கரோனா சிகிச்சைக்காக, தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை தேவை என்ற நிலையில், நகரின் மையப்பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையை தோ்வு செய்துள்ளதாக பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது.

இந்த மகப்பேறு மருத்துவமனையானது, நகரத்தின் மையப்பகுதியில், மக்கள் நெருக்கமாக வாழக்கூடிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையானது, திருவாரூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு மகப்பேறு மருத்துவமனையாக பயன்படுவதால், இங்கு கரோனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனையாக மாற்றுவதைத் தவிா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

இதற்கு பதிலாக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகிலுள்ள, ஏற்கெனவே மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்த கட்டடத்தை பயன்படுத்தலாம். மேலும், திருவாரூா் பழைய மருத்துவமனை, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் திரு வி.க. அரசு கலைக்கல்லூரி அல்லது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வு மாளிகை மற்றும் பயணியா் விடுதி, இவற்றில் எது சிறந்ததோ, அதை அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவா்கள் ஆய்வு செய்து அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, நகரின் மையப்பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையை கரோனாவுக்கான தனி மருத்துவமனையாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT