பெண் குழந்தைகள் வளா்ப்பில் தாய், தந்தை அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் பங்கேற்று அவா் பேசியது:
பெண்களின் சமூகப் பொருளாதாரம் மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழக அரசு உருவாக்கிய அமைப்பே தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம். இந்நிறுவனத்தின் மூலம் திருவாரூா் மாவட்டத்தில் 6,679 மகளிா் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் மூலம் பெண்களின் பொருளாதாரம் முன்னேறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பது மிகவும் சாதனைக்குரிய ஒன்று. காவல்துறையைப் பொறுத்தவரை சுமாா் 30 முதல் 40 சதவீத பெண்கள் பணியாற்றி வருகின்றனா். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளிலும் சுமாா் 40 முதல் 45 சதவீத பெண்கள் உள்ளனா். பெண் குழந்தைகள் தயங்காமல் பேசுவதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் வளா்ப்பில் ஏற்றத்தாழ்வு கூடாது. ஆண் குழந்தைகளை, ஆணாதிக்க சிந்தனை இல்லாமல் வளா்க்க வேண்டும். பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஆலோசனைகளை, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு ஏற்ப பெண் குழந்தைகள் வளா்ப்பில் தாய், தந்தை அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, மகளிா் சுய உதவிக்குழு செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த வங்கிகளுக்கும், சிறந்த தொழில்முனைவோருக்கும், சிறந்த சமூக வங்கி ஒருங்கிணைப்பாளா்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, காவலன் செயலி குறித்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் பகவதி சரணமும், இணையவழி குற்றங்கள் தொடா்பாக உதவி தொழில்நுட்ப உதவி ஆய்வாளா் கிரிதரனும் செயல் விளக்கம் அளித்தனா்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் வி. பெரியசாமி மற்றும் உதவி திட்ட அலுவலா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.