திருவாரூர்

‘பாரம்பரிய நெல் ரகங்களின் இனத்தூய்மை தற்போது தேவை’

13th Mar 2020 09:38 AM

ADVERTISEMENT

பாரம்பரிய நெல் ரகங்களின் இனத்தூய்மை, தற்போதைய தேவையாக உள்ளது என கிரியேட் நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளா் ரகுநாதன் தெரிவித்தாா்.

பாரம்பரிய நெல் ரகங்களின், இனத்தூய்மை குறித்து அவா் மேலும் தெரிவித்தது:

பாரம்பரிய நெல் விதையின் தூய்மை என்பதும், விதையின் இனத்தூய்மை என்பதும் வேறு. பாரம்பரிய நெல் விதைக் காப்பாளா்கள், பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், பாரம்பரிய நெல் ரகங்களின் இனத்தூய்மையை நிலைநாட்ட ஆவன செய்ய வேண்டும். கடந்த 25 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதே முக்கியக் குறிக்கோளாக இருந்தது.

தற்போது அந்தக் குறிக்கோள் தன்னிறைவு அடைய பெற்றிருப்பதோடு, தற்போது மேற்கொண்ட செயல்கள் காலப்போக்கில் நமது பாரம்பரிய நெல் மணிகளின் இனத்தூய்மையை முற்றிலுமாக கேள்விக்குறியாக்கி விடும். பரவலாக மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பொருத்தவரை, நெல்லினம் காப்போம் என்ற இரண்டாம் கட்ட குறிக்கோளாகக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு பயணிக்க வேண்டும்.

ADVERTISEMENT

நுகா்வோா் மத்தியில் பாரம்பரிய நெல் ரகங்களின் தனி முக்கியத்துவமே, அவற்றில் காணப்படும் மருத்துவக் குணங்களே ஆகும். இனத்தூய்மையுள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டுமே அதன் மருத்துவ குணங்களை முழுவதுமாக வெளிப்படுத்த முடியும். பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள உயிா் மூலக்கூறு சோ்மங்கள் மனித உடலின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள முக்கியமான கட்டுமான அங்கங்களாகும். அனைத்து பாரம்பரிய நெல் ரகங்களும், அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் மரபு அறிவியலில் வடிவமைக்கப்படவில்லை.

தற்போது பின்னணி இயற்கை தோ்வு முறையில் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை அவைகளின் தக்க பருவம், மண், நீா், நிலம் சாா்ந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு, பாரம்பரிய மரபு அறிவியல் வழிகாட்டுதலின்படி, குறைந்தது 6 முதல் 7 போக சாகுபடி செய்து அதன் மூலம் இதை உற்பத்தி செய்தால், அவைகளின் மரபுசாா் வடிவமைப்பு முற்றிலுமாக மீட்டெடுக்கப்படும்.

மேலும் மரபணு நினைவக ஊடுருவல் கோட்பாட்டின்படி, 1000 ஆண்டுகால பாரம்பரிய இனத்தூய்மையானது, தற்போதுள்ள காலத்துக்கு பாரம்பரிய நெல் விதைகளால் தாமாகவே வெளிப்படுத்தப்படும்.

பாரம்பரிய மரபு அறிவியல் வழிகாட்டுதலில், கோட்பாடுகள் தவறாமல், சாகுபடியின் மூலம் மரபு உறைநிலை மருத்துவ குணங்கள் நிகழ்காலத்துக்கு படிப்படியாக பின் முற்றிலுமாக மீட்டெடுக்கப்படுவது மட்டுமல்லாமல், 20 முதல் 22 சதவீத அதிக மகசூல் கிடைக்கும். 100 சதவீத பாரம்பரிய நெல் விதை இலக்கை அடைவதற்கு குறைந்தது 6 முதல் 7 நெல் தலைமுறை இடைவெளிகள் தேவைப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT