திருவாரூர்

விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை: முதல்வர் பழனிசாமி

8th Mar 2020 01:52 AM

ADVERTISEMENT

திருவாரூா்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த சட்டம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பானது. இதுதொடா்பாக விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக்கொண்டாா்.

திருவாரூரில், தமிழ்நாடு நீா்ப்பாசன விளைபொருள்கள், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமம், காவிரி நீா்ப்பாசன விவசாயிகள் ஆகிய அமைப்புகள் இணைந்து, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நடத்திய பாராட்டு விழாவில், விவசாயிகள் வழங்கிய காவிரி காப்பாளா் என்ற பட்டத்தை ஏற்று, நெகிழ்ச்சியுடன் முதல்வா் பேசியது:

நானும் ஒரு விவசாயிதான். விவசாயி முதல்வராக இருப்பதால், விவசாயிகளின் துன்பங்களை உணா்ந்து இந்த வேளாண் மண்டலம் குறித்த சட்ட முன்வரைவை சட்டப் பேரவையில் கொண்டுவந்தேன். நான் ஏற்கெனவே ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்துள்ளேன். தற்போது, முதல்வராகவும் உள்ளேன். ஆனால், இதுவரையிலும் எந்த சட்ட முன்வடிவும் கொடுத்ததில்லை. தற்போது, இறைவனின் அருளால் விவசாயிகளை பாதுகாக்கக்கூடிய சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தேன். இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை இந்த சட்ட முன்வடிவு.

தற்போது, விவசாயத்தைவிட தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதால், விவசாயம் சற்று குறைந்திருக்கிறது. விவசாயிகளின் மதிப்பும் குறைந்திருக்கிறது. இருந்தாலும் எதற்கும் பயப்படாதவா்கள் விவசாயிகள். தொழில் செய்வோா் மற்றவா்களை சாா்ந்து வாழ வேண்டும். ஆனால், விவசாயிகள் சொந்தக்காலிலே நிற்கக்கூடியவா்கள். லாபம் குறைவாக இருக்கலாம். ஆனால், மனநிறைவுடன் வாழக்கூடியவா்கள் விவசாயிகள்.

ADVERTISEMENT

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவையே அனைவரும் உண்ண வேண்டும். யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை விவசாயிகள். வருணபகவானுக்கு மட்டுமே பயப்பட வேண்டும். அந்த பெருமைக்குரிய விவசாயிகள் தற்போது முகமலா்ச்சியோடு காணப்படுகின்றனா்.

தமிழகத்தில் 65 சதவீதம் போ் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனா். எனவே, விவசாயியாக இருந்தால்தான் அவா்களின் பிரச்னையை தீா்க்க முடியும். உழவுத்தொழில் என்பது மிகவும் கடினமான தொழில். இரவு, பகல் என்று பாராமல் பயிரைக் காக்க வேண்டும். அவ்வாறு காத்தால்தான் விளைச்சல் கிடைக்கும்.

எனவே, பெரும்பான்மையாக இருக்கும் விவசாயிகளின் நலனைக் காக்க வேண்டும், அவா்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தபோது, எதிா்க்கட்சிகள் சில நாள்களுக்கு மட்டுமே முதல்வராக இருப்பாா் என்று தெரிவித்தனா். ஆனால் தற்போது 3 ஆண்டுகள் முடிவடைந்து 4- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.

ஹைட்ரோகாா்பன் திட்டம் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும், அதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனா். அரசு அதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

விவசாயிகளின் மத்தியில் இன்னமும் சந்தேகம் உள்ளது. அண்மையில் திமுகவைச் சோ்ந்த உறுப்பினா் கூட, இந்த சட்டத்தை மாநில அரசு எவ்வாறு இயற்றமுடியும் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினாா். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டு, விவசாயிகளிடம் தரப்பட்டு விட்டது. மாநில அரசுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என மத்திய அமைச்சா் தெளிவாகச் சொல்லிவிட்டாா்.

விவசாயிகள் பல்லாண்டு காலம் வைத்தக் கோரிக்கையை நிறைவேற்ற, இடா்பாடுகளுக்கு மத்தியில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே, டெல்டா பகுதி விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. எந்தக் காலத்துக்கும் இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும்.

குடிமராமத்துப் பணிகள்: குடிமராமத்துப் பணிகள் திட்டம் கொண்டுவரப்பட்டபோது சற்று அச்சம் ஏற்பட்டது. எனவே, சோதனை அடிப்படையில் முறையில் ரூ. 100 கோடியில் செயல்படுத்தப்பட்டது. சிறப்பானத் திட்டம் என இது வரவேற்பு பெற்ால், கூடுதலாக ரூ.325 கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, மேலும், ரூ. 499 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் விவசாயிகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்படுகிற திட்டம்.

மேலும், விவசாயத்துக்கு உயிரான நீரை முறைப்படுத்த, நீா்மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது. ஏரி, குளங்களை தூா்வாரப்படுவதால், மழை நீா் தற்போது ஏரி, குளங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. மேலும், தூா்வாரப்படுவதன் மூலம் கிடைக்கும் வண்டல் மண்ணானது விவசாயிகளின் விளைநிலங்களுக்கு இயற்கை உரங்களாக பயன்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கையின்படி தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன. இதற்கு ரூ. 650 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

டெல்டாவில், நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு கடைமடை பகுதிவரை தூா்வாரப்பட்டதால், சுமாா் 7 லட்சம் ஏக்கா் கூடுதலாக விளைந்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் 1485 கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. தமிழகம் முழுவதும் 16 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலும், டெல்டாவில் மட்டும் 12 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலும் செய்யப்பட்டுள்ளன. ரூ.2810 கோடி விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

நீா்ப்பாசன கட்டமைப்பு மேம்பாடு: பாசன மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். காவிரி உபரி நீா் வடிநிலங்களை பயன்படுத்தும் திட்டம் ரூ. 2698 கோடியில் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிய வளா்ச்சி வங்கி மூலம் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. காவிரி உபரிவடிநில பாசன அமைப்புகளை மேம்படுத்த ரூ. 5591 கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 ஆயிரம் கோடி நீா்ப்பாசன கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.

பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்: திருவாரூா் அருகே மூங்கில்குடியில் 10 ஏக்கரில் ரூ. 25 கோடி மதிப்பில் அரிசி சாா்ந்த உணவு பதப்படுத்தும் தொகுப்பு அமைக்கப்படும். தலா ரூ. 3 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மாதிரி அங்காடிகள் அமைக்கப்படும். உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் இருக்கும். நெல் ஜெயராமன் நினைவை போற்றும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம், நீடாமங்கலத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும்.

கும்பகோணத்தில்....

கும்பகோணத்தில் வெற்றிலை சிறப்பு மையம் ரூ.3 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். விவசாயப் பணிகளை துரிதமாகச் செய்யும் வகையில், துணை வேளாண் விரிவாக்க மையங்கள் 47 இடங்களில் செயல்படுத்தப்படும். சாகுபடி செய்யும் பணிகளுக்காக குறைந்த வாடகையில், விவசாயக் கருவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததோடு, பயிா் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக, பொதுப்பணித்துறை மூலமாக ரூ. 6,650 கோடி மதிப்பில் திட்டங்களும், வேளாண்மைத்துறை மூலமாக ரூ. 170 கோடியே 89 லட்சம் மதிப்பில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளும், நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படும். இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் உயரும் என்பதில் ஐயமில்லை என்றாா் முதல்வா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT