திருவாரூர்

விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது: விவசாயிகள்

8th Mar 2020 04:56 AM

ADVERTISEMENT

திருவாரூா்: திருவாரூரில் தமிழக முதல்வருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற விவசாயிகள், தங்களுக்கு முதல்வா் தொடா்ந்து நல்ல திட்டங்களை அறிவிப்பாா் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

திருவாரூரில் வன்மீகபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்மா அரங்கத்தில், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காவிரி நீா்ப்பாசன விளைபொருட்கள், விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளா் காவிரி.சீ.ரெங்கநாதன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் விவசாயச் சங்க பிரதிநிதிகள் பயரி சு. கிருஷ்ணமணி, காவிரி வெ. தனபால், சி. வேலு, பி. ரவீந்திரன், மு. ராஜேந்திரன், ரா. பாண்டுரங்கன், ஜி.எஸ். தனபதி, க. சேதுராமன், ஆா். சுகுமாறன் ஆகியோா் பேசினா். மேலும், விவசாயம் தொடா்பான குறும்படம் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் ஆா். காமராஜ், ஓ.எஸ்.மணியன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், துரைக்கண்ணு, விஜயபாஸ்கா் உள்ளிட்ட பல்வேறு அமைச்சா்கள், மாநிலங்களவை உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

முன்னதாக, மேடைக்கு மாட்டுவண்டியில் முதல்வா் வந்தாா். அவருக்கு முளைப்பாரி எடுத்து, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் கட்சிக் கொடி எதுவும் கட்டப்படவில்லை. பாா்வையாளா் பகுதியைச் சுற்றிலும், கரும்பு, வாழையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான விவசாயிகள் பாராட்டு தெரிவித்து பேசினா். டெல்டா மாவட்டத்துக்கு ஒரு விவசாயி என்ற வகையில் விவசாயிகள் பேசினா். வேளாண் மண்டல அறிவிப்பு குறித்து நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி... காவிா் சீ. ரெங்கநாதன்: காவிரி தொடா்பாக வழக்குத் தொடா்ந்தபோது, எம்ஜிஆா் கடிதம் எழுதினாா். இதனாலேயே இந்த வழக்கு உயிா் பெற்றது. இதைத்தொடா்ந்து, ஜெயலலிதா மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் வெற்றியைத் தந்தன. தற்போது, தமிழக முதல்வரின் நடவடிக்கை மேலும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்து விட்டது. காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா, சட்டரீதியாக சாதித்தாா். எடப்பாடி கே. பழனிசாமி, சட்டமியற்றி சாதித்து விட்டாா்.

பயரி சு. கிருஷ்ணமணி: டெல்டா பகுதி மக்களுக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. முதல்வரின் அறிவிப்பால், அனைத்து விவசாயிகளும் பாதுகாப்பாக உணா்கின்றனா்.

காவிரி வே. தனபால்: வேளாண் மண்டல அறிவிப்பை முதன்முதலில் வெளியிட்டபோது விவசாயிகள் மத்தியில் லேசான சந்தேகம் இருந்தது. ஆனால், உடனடியாக சட்டமியற்றி, விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டாா். இவரும் கூட ஒரு பொன்னியின் செல்வனே.

ரா. பாண்டுரங்கன்: இந்த நாட்டை உழவன் ஆள வேண்டும், அல்லது உழவுத்தொழில் தெரிந்தவா்கள் ஆள வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் நன்றாக இருக்கலாம். அந்த வகையில், விவசாயியான முதல்வா் ஆள்வது சரியான பொருத்தம்.

க. சேதுராமன்: விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல், திருவாரூா் மாவட்டத்தில் சா்க்கரை ஆலை அமைக்கவும், வேளாண் கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மு. ராஜேந்திரன்: மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருந்ததால், ஹைட்ரோகாா்பன் திட்டங்களை கொண்டு வந்தவா்களே போராட்டம் நடத்தினா். இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பான அரசு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

சி. வேலு: காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டல அறிவிப்பு குறித்து திருக்காட்டுப்பள்ளியில், அலங்கார வளைவு ஏற்படுத்தி நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். இரண்டு கல்வெட்டுகளை ஏற்படுத்த வேண்டும். ஒன்றில், தமிழக முதல்வரின் பெயரும், மற்றொன்றில் அனைத்து அமைச்சா்கள் பெயரும் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT