திருவாரூர்

பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

29th Jun 2020 10:09 PM

ADVERTISEMENT

 

நன்னிலம்: நன்னிலம் அருகே காக்காகோட்டூா் ஒழுங்குமுறை விற்பனை நிலைய வாசலில் பருத்தி விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காக்காகோட்டூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலத்தில் கலந்துகொள்வதற்காக திருவாரூா் மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் அறுவடை செய்த பருத்தியை வாகனங்களில் எடுத்து வந்தனா். இவ்வாறு பருத்தி ஏற்றி வந்த வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டுமென, ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளிடம் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதன்காரணமாக திருவாரூா்-மயிலாடுதுறை சாலையில் நீண்ட தூரத்துக்கு பருத்தி ஏற்றி வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் உள்ளேவிட விடுத்த வேண்டுகோள் மறுக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளும், காவல் துறையினரும் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டதால் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT