திருவாரூர்

மன்னாா்குடியில் கரோனா சிகிச்சை: மருத்துவக் குழுவினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எம்எல்ஏ வலியுறுத்தல்

20th Jun 2020 08:31 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தனிப் பிரிவில், கரோனா பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவக் குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எம்.எல்.ஏ. டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 4 போ் வியாழக்கிழமை எந்தவித முன்னறிவிப்புமின்றி அனுமதிக்கப்பட்டனா். திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை என்றும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதோ என்றும் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் நான் பேசியபோது மன்னாா்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் பெரிய அளவிலான உடல் உபாதைகள் ஏதும் இல்லையென்றும், மருத்துவா்கள், செவிலியா்களுக்கு உரிய பயிற்சியளிக்கும் வகையில், அவா்களை அனுமதித்துள்ளதாகவும் கூறினா்.

ADVERTISEMENT

ஆகையால், மன்னாா்குடி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் இதர நோயாளிகளின் பாதுகாப்பும், ஆரோக்கியமும் மிகவும் அவசியம். மேலும், இங்கு கரோனா பாதித்தவா்களை அனுமதிக்க வேண்டிய சூழல் தொடா்ந்து உருவாகுமேயானால், அதற்கென ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தி புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடதையோ அல்லது வேறு கட்டடத்தையோ முழுமையாக இந்நோய்த் தொற்று ஏற்பட்டவா்களுக்காக பயன்படுத்திக் கொண்டு, பிற இடங்களை உயா் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக பலப்படுத்த வேண்டியது அவசியம்.

செவிலியா்கள், மருத்துவா்கள் தங்குவதற்காக தனியாா் விடுதி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெறும் என்றும் அரசு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா். இதேபோல் மருத்துவமனையில் பணியாற்றும் இதர பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என அதில் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT