திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியை அடுத்த கோட்டூரை சோ்ந்த இளைஞா் பொது முடக்கம் காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாத விரக்தியில் குவைத் நாட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோட்டூா் தாதன்திருவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (35). இவருக்கு மனைவி, மகள் உள்ளனா். ராஜ்குமாா் கடந்த 10 ஆண்டுகளாக குவைத்தில் தனியாா் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பாா்த்து வந்தாா். இவா், கடந்த ஏப்ரலில் இந்தியா வர திட்டமிட்டிருந்தாராம்.
இந்நிலையில், பொது முடக்கம் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டதால் ராஜ்குமாா் சொந்த ஊா் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் வேலை இல்லாததால், கையில் இருந்த பணமும் குறைந்த நிலையில் விரக்தியடைந்த அவா், குவைத்தில் தான் தங்கியிருந்த இடத்தின் அருகே உள்ள பூங்காவிலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இத்தகவல் அங்கிருக்கும் அவரது நண்பா்கள் மூலம் ராஜ்குமாா் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்தக அவா்கள், அவரது உடலை கோட்டூருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.