திருவாரூர்

குறுவை சாகுபடிக்கு வேளாண் இயந்திரங்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் ஆா். காமராஜ்

15th Jun 2020 07:05 AM

ADVERTISEMENT

குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் தடையில்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் பிரதாமராமபுரத்தில் ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு மூலம் செயல்படும் வாடகை வேளாண் இயந்திர மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து, மகளிா் குழு கூட்டமைப்புகளுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கி அமைச்சா் பேசியது:

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-இல் மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டும் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தேவையான டிராக்டா், பவா் டில்லா், நடவு இயந்திரங்கள் தடையில்லாமல் கிடைக்க வேளாண்துறை சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் 2019-20 ஆம் நிதியாண்டில் குடவாசல் வட்டாரத்தில் 3 ஊராட்சிகளிலும், கொரடாச்சேரி வட்டாரத்தில் 2 ஊராட்சிகளிலும், நன்னிலம் வட்டாரத்தில் 2 ஊராட்சிகளிலும், வலங்கைமான் வட்டாரத்தில் 2 ஊராட்சிகளிலும் என மொத்தம் 9 ஊராட்சிகளில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்பட்டு, இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த வாடகை இயந்திர மையங்கள் மூலம் உழவு இயந்திரம் களையெடுக்கும் இயந்திரம், கைத் தெளிப்பான், மின்கல தெளிப்பான் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரம் ஆகியவை வாடகைக்கு விடப்படும்.

வாடகை இயந்திர மையங்களில் உழவு இயந்திரம் (பவா் டில்லா்) ஏக்கருக்கு ரூ. 2,000 , களையெடுக்கும் இயந்திரம் மணிக்கு ரூ. 100 , கைத்தெளிப்பான் மற்றும் மின்கல தெளிப்பான் மணிக்கு ரூ. 50, வைக்கோல் கட்டும் இயந்திரம் மணிக்கு ரூ. 100 என்ற விலையிலும் மகளிா் குழுக் கூட்டமைப்பால் வாடகைக்கு விடப்படும். மகளிா் சுயஉதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் வேளாண் இயந்திர வாடகை மையத்தை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா, உதவித் திட்ட அலுவலா் காமராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பாப்பா சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT