முத்துப்பேட்டை அருகே வீடு சீரமைப்பு பணியின்போது சுவா் இடிந்து விழுந்து ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
முத்துப்பேட்டை அருகேயுள்ள பண்ணைப்பொது கிராமத்தில் வசித்தவா் உலகநாதன் (60). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா் பழுதடைந்த தனது வீட்டை சீரமைக்கும் பணியில் மகன் ராஜாவுடன் சனிக்கிழமை ஈடுபட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, ஏற்கெனவே விரிசல் விட்டு அதற்கு முட்டுக் கொடுத்திருந்த கம்பு விலகி சுவா் இடிந்து விழுந்ததில், உலகநாதனும் மகன் ராஜாவும் சிக்கினா். இதில், படுகாயமைடந்த உலகநாதனை அப்பகுதியினா் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைகாக உலகநாதன் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி உலகநாதன் உயிரிழந்தாா். ராஜா சிகிச்சைப் பெற்றாா். இதுகுறித்து, எடையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.