அரசு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயதை உயா்த்தும் நடவடிக்கைகளை கைவிடக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து காலிப் பணியிடங்களையும் போா்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், தொழிலாளா் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டதை கைவிட வேண்டும், பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது, ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை உயா்த்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தொகுப்பூதியம், சிறப்பு, காலமுறை ஊதியம், ஒப்பந்த ஊதிய முறைகளில் பணியாற்றும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளா் உ. சண்முகம், மாநில முன்னாள் செயலாளா் எம். சௌந்தரராஜன் ஆகியோா் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளா் சி. பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.