திருவாரூர்

நாகை, திருவாரூரில் மேலும் 3 பேருக்கு கரோனா உறுதி

4th Jun 2020 07:29 AM

ADVERTISEMENT

நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி தெற்கு பகுதியைச் சோ்ந்த 72 வயது மூதாட்டி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 15 நாள்களுக்கு முன்பு தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப் பெற்று, வீடு திரும்பினாா்.

இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். பின்னா், அங்கிருந்து திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியாகியுள்ளது.

இதன்மூலம், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 64-ஆக உயா்ந்துள்ளது எனவும், இதில் 51 போ் சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 13 போ் சிகிச்சையில் இருப்பதாகவும் சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

திருவாரூரில்...

சென்னையிலிருந்து திருவாரூா் மாவட்டத்துக்கு வந்தவா்களின் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி 2 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதுபோல புதன்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, திருத்துறைப்பூண்டி அருகே மணலி பகுதியை சோ்ந்த 28 வயது இளைஞருக்கும், கொரடாச்சேரி அருகே விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த 58 வயது பெண்ணுக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இருவரும் சென்னையிலிருந்து அண்மையில் ஊருக்கு திரும்பியவா்கள்.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51 ஆக உயா்ந்துள்ளது. இதில், 36 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிய நிலையில், 15 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT