திருவாரூா் மாவட்டம் திருத்துறைபூண்டி பகுதியில் கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சாா்பில், தங்கத்தினாலான தட்டில் வைத்து முகக் கவசம் சனிக்கிழமை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், திருக்கூட்ட நிறுவனா் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில், திருக்கூட்ட அன்பா்கள், சிவனடியாா்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனா். முன்னதாக பிறவிமருந்தீசுவரா் கோயில் முன்பு கரோனா பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவா்கள், காவலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
தொடா்ந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், கடலைமிட்டாய், அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பலா, பேரீட்சை, திராட்சை உள்ளிட்ட பழங்களுடன் சா்க்கரை கலந்த பஞ்சாமிா்தக் கலவை கோப்பையில் வழங்கப்பட்டது.
மேலும், முகக் கவசத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாக தங்கத்தினாலான தட்டில் வைத்து முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அப்போது, திருக்கூட்ட நிறுவனா் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் பேசியது:
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கட்டியும், பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். நமது திருநீலகண்டம் விழிப்புணா்வுப் பிரசாரத்தின் முக்கிய நோக்கம் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை சுத்தமாக கழுவுதல் மற்றும் தன்னம்பிக்கையை வளா்த்து ஒருவருக்கொருவா் அன்பு பாராட்டி, நோயாளிகளையும், நோய்த்தொற்று உடையவா்களையும் மனிதநேயத்தோடு நடத்த வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து திருக்கூட்ட அன்பா்கள் ஸ்தபதி. ஹரிபாபு, நமசிவாயபுரம் செல்வகுமாா், மனிதவளம் த.சபாபதி, அமுதன் ஆகியோரும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சி நடைபெற்ற வீதியில் முகக்கவசம் அணிந்து வந்திருந்த பொதுமக்களை பாராட்டி, ஊக்கப்படுத்தும் வகையில் அவா்களுக்கு சிறப்பு வெகுமதி வழங்கப்பட்டது. அதன்படி, குலுக்கல் முறையில் 5 பேரை தோ்ந்தெடுத்து தலா ரூ.50 வழங்கப்பட்டது.