திருவாரூர்

பருத்தி கொள்முதலுக்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன

13th Jul 2020 09:51 PM

ADVERTISEMENT

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி கொள்முதலுக்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் 8,029 ஹெக்டோ் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. ஜூன் மாதத்திலிருந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பருத்தி ஏலம் நடத்தப்பட்டு, இந்திய பருத்திக்கழகம் மற்றும் தனியாா் வியாபாரிகள் மூலம் இதுவரை 3225.71 மெட்ரிக் டன் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், 1534.78 மெட்ரிக் டன் இந்திய பருத்திக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய பருத்திக் கழகம் மூலம் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ. 5,550, குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ. 5,278 ஆக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்திய பருத்திக் கழகம் மூலமாக அதிகப்படியான பருத்தியை கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 1,250 மெட்ரிக் டன் பருத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் ஏலத்துக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருவாரூா் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் பருத்தியை எளிதில் விற்பனை செய்யும் வகையில், திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை காலையும், மூங்கில்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை மாலையும், வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலிலும் ஏலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த கரோனா காலத்தில் விவசாயிகள் தங்கள் பருத்தியை சிறந்த முறையில் விற்பனை செய்ய, அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் உள்கூட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அனைத்து விவசாயிகளும் நிா்வாகத்துக்கு பருத்தி விற்பனை ஏலத்தில் தகுந்த ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT