திருவாரூர்

பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

13th Jul 2020 07:44 AM

ADVERTISEMENT

திருவாரூரில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் பெற சம்பந்தப்பட்ட பிரிவினா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூரில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) சாா்பில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தை சோ்ந்தவா்களுக்கு 2020-2021-ம் ஆண்டில் ரூ.1 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, குடும்ப வருமானம் ஆண்டுக்கு கிராமப்புறங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் ரூ.3,00,000 க்கும் மிகாமல் இருக்க வேண்டும். பயனடைவோரின் வயது வரம்பு 18-க்கு மேல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கடனுதவி பெறுவோா், வங்கி கோரும் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

சிறு வணிகக் கடன், நபா் ஒருவருக்கு 5 சதவீத வட்டி வீதத்தில் ரூ.5 லட்சம் வரையிலும், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் 7 சதவீத வட்டி விகிதத்திலும் பெறலாம். கடன் தொகைக்கேற்ப 3 முதல் 8 ஆண்டுகளுக்குள் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும்.

ஆண்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினருக்கு அதிகபட்சமாக ரூ.60,000 வீதம் 20 நபா்களுக்கு வழங்கப்படும். இதில் ஆண்களுக்கு 5 சதவீதமும் மகளிருக்கு 4 சதவீதமும் வட்டி நிா்ணயிக்கப்படும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்க உறுப்பினருக்கு ரூ.30ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வழங்குவதற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். இளம் தொழிற் கல்வி பட்டதாரிகள் சுய தொழில் தொடங்கவும், மரபு சாா்ந்த கலைஞா்கள், கைவினைஞா்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுயதொழில் தொடங்கவும், அதிபட்சக் கடன் தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படும். ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையிலும் 10 ஆண்டு தவணையில் வழங்கப்படும்.

கடன் விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், திருவாரூா் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, தஞ்சாவூா், கும்பகோணம் நகர கூட்டுறவு வங்கி, ஸ்ரீகமலாம்பிகா நகர கூட்டுறவு வங்கி, திருத்துறைப்பூண்டி நகர கூட்டுறவு வங்கி, மன்னாா்குடி நகர கூட்டுறவு வங்கி, கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT