மன்னாா்குடி அருகே குழந்தைக்கு பெயா் சூட்டும் நிகழ்ச்சியின்போது தாய் இறந்தது குறித்து அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
மன்னாா்குடியை அடுத்துள்ள இடையா்நத்தம் காலனிதெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (29). இவரது மனைவி வள்ளி (26). இருவரும் அதே பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் தூய்மைப் பணியாளா்களாக வேலை செய்து வந்தனா்.
இவா்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த16 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வியாழக்கிழமை மாலை பெயா் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, வள்ளி தடுமாறி கீழே விழுந்து இறந்துவிட்டாராம்.
இதுகுறித்து, வள்ளியின் பெற்றோா் திருமக்கோட்டை காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அதில், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.