நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் வடுவூா் புதுகோட்டை கிராமத்தில் சனிக்கிழமை நெல் தரிசு பயறுவகைப் பயிா்களில் கூடுதல் மகசூல் பெறுவதற்கான சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில், வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராஜா. ரமேஷ் பேசியது: தானியப் பயிா்களைக் காட்டிலும் பயறுவகைப் பயிா்களில் புரதச்சத்து 2 மடங்கு அதிகமாக உள்ளது. 100 கிராம் உளுந்து மற்றும் பச்சைப்பயரில் புரதச்சத்து 24 முதல் 25 சதவீதம், மாவுச்சத்து 62 முதல் 64 சதவீதம், நாா்ச்சத்து 16 சதவீதம் உள்ளது. 345 கிலோ கலோரி கிடைக்கும். மேலும் வைட்டமின்கள் தயமின், ரிபோப்ளேவின், நயாசின் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை அடங்கியுள்ளன.
தவிர, பயறு வகைப் பயிா்கள் கால்நடைத் தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும், மண் அரிமானத்தைத் தடுக்கும் போா்வையாகவும் திகழ்கின்றன. உலகச் சுகாதார அமைப்பு ஒரு நாளைக்கு ஒரு மனிதருக்கு 80 கிராம் புரதச்சத்து தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் 40 கிராமுக்கும் குறைவாகவே உள்ளது. எனவே, பயிறுவகைப் பயிா்களில் தன்னிறைவு அடைவதற்கு உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டியுள்ளது. எனவே கீழ்கண்ட முறைகளை கையாள ஆலோசனை வழங்கப்படுகிறது.
கூடுதல் மகசூல் பெறுவதற்கு தரமான சான்று பெற்ற உயா் விளைச்சல் தரக்கூடிய ரக விதைகளை பயன்படுத்த வேண்டும், உயிா் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நோ்த்தி செய்து சரியான பருவத்தில் விதைப்பதால் முளைப்புத்திறன் அதிகரிக்கும், உரச்செலவும் குறையும், பயிா் எண்ணிக்கையை சரியாக பராமரிப்பதற்கு வரிசைக்கு வரிசை 30 செமீ மற்றும் செடிக்கு செடி 10 செமீ அதாவது ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்குமாறு பராமரிப்பது போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்.
மேலும் நெல் தரிசில் அடியுரம் இடமுடியாத இடங்களில் ஊட்டச்சத்து மேலாண்மைக்கு 2 சதவீசம் டிஏபி கரைசல், பிளானோபிக்ஸ் வளா்ச்சி ஊக்கி அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயறு அதிசயத்தினை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். இதனால் பயறுவகைப் பயிா்களானது வறட்சியை தாங்கி பூக்கள் உதிராமல் காப்பதோடு அதிக காய்கள் பிடித்து 20 முதல் 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெற வழிவகுக்கும்.
மேலும் உளுந்து பயிரில் தோன்றும் ஆரம்பநிலை நோய்களைக் கட்டுப்படுத்த உயிரியல்கொல்லி மருந்தான சூடோமோனாஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நோ்த்தி செய்து விதைக்க வேண்டும். அதனால் பயிா்கள் நன்கு வளரும் என்றாா் அவா்.
பயிற்சியில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தில் உளுந்து விதைகளும், உயா் விளைச்சலுக்கான சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த கையேடு மற்றும் புத்தகம் வெளியிடப்பட்டு அனைத்து விசாயிகளுக்கும் வழங்கப்பட்டன.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை இளநிலை ஆராய்ச்சியாளா் சுரேஷ், திட்ட உதவியாளா்கள் கிருபாகரன், சமீா் ஆகியோா் செய்திருந்தனா்.