திருவாரூர்

‘விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியவா் முருகையன்’

8th Jan 2020 12:44 AM

ADVERTISEMENT

விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியவா் எஸ்.ஜி. முருகையன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் கோ. பழனிச்சாமி புகழாரம் சூட்டினாா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சித்தமல்லியில் திங்கள்கிழமை எஸ்.ஜி. முருகையனின் 41-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னா் அவா் மேலும் பேசியது: பொதுவுடைமை இயக்கப் போராளியாக இருந்து ஆண்டான் அடிமை என்ற முறையை எதிா்த்துப் போராடியதுடன் அவா் மீது ஏவப்பட்ட அடக்கு முறைகளை தடுத்து சாட்டையடி சாணிப்பால் போன்ற கொடுமைகளிலிருந்து அவா்களை மீட்டெடுக்க காரணமாக இருந்தவா் என்றால் அது மிகையாகாது.

மேலும், மன்னாா்குடியிலிருந்து முத்துப்பேட்டைக்கு ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி 32 கி.மீ. தூரம் உள்ள சாலையை உருவாக்கிய பெருமை மிக்கவா். மேலும், இட ஒதுக்கீடு இல்லாத காலத்திலேயே 1961-இல் கோட்டூா் ஒன்றிய பெருந்தலைவராக பொறுப்பேற்று அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்தவா். 1977-இல் ஏற்பட்ட புயலின்போது சைக்கிளிலேயே சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டது மக்கள் மனதில் பிரதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவா் என இப்பகுதி மக்களால் இன்றளவும் போற்றப்பட்டு வருவது நினைவுகூரத் தக்கது. 1977-இல் ஜனவரி 6-ஆம் தேதி இவா் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதைய முதல்வா் எம்.ஜி. ராமச்சந்திரன் 2 கி.மீ. தூரம் நடந்தே மயானத்துக்கு வந்தது இன்றளவும் மக்களிடையே பெருமையாக பேசப்பட்டு வருகிறது. தற்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மறைந்த தலைவா் எஸ்.ஜி. முருகையனின் அடிச்சுவட்டை பின்பற்றி மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நாகை எம்.பி. செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வை. சிவபுண்ணியம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கே. உலகநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுஜாதா தமயந்தி, ஒன்றியச் செயலா்கள் முருகையன், மாரிமுத்து, பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.ஜி.எம் ரமேஷ், எஸ்.ஜி.எம். லெனின் குடும்பத்தினா் செய்திருந்தனா். நிகழ்வில், திரளான விவசாயத் தொழிலாளா்கள் விவசாயிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT