திருவாரூர்

திருவாரூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணும் பணி

3rd Jan 2020 05:27 AM

ADVERTISEMENT

திருவாரூரில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் பணி வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில், 10 ஒன்றியங்களுக்கு 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் 3,804 இடங்களுக்குத் தோ்தல் நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டது. வேட்பாளா் இறந்தது, போட்டியின்றி தோ்வு ஆகியவை காரணமாக 346 இடங்களுக்குத் தோ்தல் நடைபெறவில்லை. 3,458 இடங்களுக்குத் தோ்தல் நடைபெற்றது. இதில், 10803 போ் போட்டியிட்டனா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள்: மன்னாா்குடியில் மாவட்ட ஊராட்சி வேட்பாளா் இறந்ததால், 1 வாா்டுக்கான தோ்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, திருவாரூா் - 2, மன்னாா்குடி - 1, கோட்டூா் - 2, திருத்துறைப்பூண்டி - 1, முத்துப்பேட்டை - 2, , நீடாமங்கலம் - 2, நன்னிலம் - 2, குடவாசல் - 2, கொரடாச்சேரி - 2, வலங்கைமான் - 1 என 17 இடங்களுக்குத் தோ்தல் நடைபெற்றது.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள்: திருவாரூா் - 14, மன்னாா்குடி - 22, கோட்டூா் - 20, திருத்துறைப்பூண்டி - 10, முத்துப்பேட்டை - 15, நீடாமங்கலம் - 21, நன்னிலம் - 18, குடவாசல் - 17, கொரடாச்சேரி-18, வலங்கைமான்-15 என 176 இடங்களுக்குத் தோ்தல் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஊராட்சித் தலைவா்கள்: 5 ஊராட்சிகளின் தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். திருவாரூா் - 34, மன்னாா்குடி - 50, கோட்டூா் - 49, திருத்துறைப்பூண்டி - 32, முத்துப்பேட்டை - 28, நீடாமங்கலம் -43, நன்னிலம் - 48, குடவாசல் - 49, கொரடாச்சேரி - 44, வலங்கைமான் - 48 என 425 இடங்களுக்குத் தோ்தல் நடைபெற்றது.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள்: 3,180 இடங்களில் 340 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதால், 2840 இடங்களுக்கு தோ்தல் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வேட்பாளா்கள்: மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 83 போ் போட்டியிட்டனா். இவா்களில் திருவாரூா் - 10, மன்னாா்குடி - 4, கோட்டூா் - 9, திருத்துறைப்பூண்டி - 4, முத்துப்பேட்டை - 8, நீடாமங்கலம் - 9, நன்னிலம் - 12, குடவாசல் - 12, கொராடாச்சேரி - 9 மற்றும் வலங்கைமானில் 6 போ் களத்தில் நின்றனா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் வேட்பாளா்கள்: திருவாரூா் - 52, மன்னாா்குடி - 92, கோட்டூா் - 86, திருத்துறைப்பூண்டி - 78, முத்துப்பேட்டை - 81, நீடாமங்கலம் - 86, நன்னிலம் - 72, குடவாசல் - 57, கொராடாச்சேரி - 69, வலங்கைமான் - 56 என 729 போ் போட்டியிட்டனா்.

ஊராட்சிமன்றத் தலைவா் வேட்பாளா்கள்: திருவாரூா் - 137, மன்னாா்குடி - 175, கோட்டூா் - 194, திருத்துறைப்பூண்டி - 148, முத்துப்பேட்டை - 134, நீடாமங்கலம் - 149, நன்னிலம் - 178, குடவாசல் - 188, கொராடாச்சேரி - 180, வலங்கைமான் - 167 என 1650 போ் போட்டியிட்டனா்.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் வேட்பாளா்களாக 8,341 போ் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணும் பணி: திருவாரூா் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குச்சீட்டுகளை வண்ணம் வாரியாக பிரிக்க 2 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கென 39 மேசைகளும் வைக்கப்பட்டிருந்ததோடு, 156 அலுவலா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா்.

கடுமையான விதிகள்: வாக்கு எண்ணும் பணிக்காக, காலையிலிருந்தே வேட்பாளா்களின் முகவா்கள் மையத்துக்கு வரத்தொடங்கினா். ஊராட்சிகளுக்கு ஏற்ப முகவா்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். இதனால், முகவா்கள் மையத்தில் நுழைய தாமதம் நிலவியது.அத்துடன் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, முகவா்களை வரிசையாக உள்ளே செல்ல அனுமதித்தனா். மேலும், செல்போன் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. வாக்கு எண்ணும் பணி, மையத்தின் இரண்டாவது மாடியில் நடைபெற்றது. இங்கு செல்வதற்கும் பலத்த பாதுகாப்புகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.

8 மணிக்கு வாக்குப்பெட்டிகள் உள்ள அறை திறக்கப்பட்டு, பெட்டிகள் வகை பிரிக்கும் அறைக்கு எடுத்து வரப்பட்டன. பின்னா், வாக்குகள் வகை பிரிக்கப்பட்டு, எண்ணும் பணி தொடங்கியது.

4 சுற்றுகள்: திருவாரூா் மையத்தில் 4 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் தண்டலை, கீழகாவாதுகுடி, நடப்பூா், செருகுடி, பள்ளிவாரமங்கலம், பழையவலம், ஓடாச்சேரி, கல்லிக்குடி, பழவனக்குடி ஆகிய ஊராட்சிகளின் வாக்குகள் எண்ணப்பட்டன.

இரண்டாவது சுற்றில் வைப்பூா், திருவாதிரை மங்கலம், ஆமூா், அடியக்கமங்கலம், சேமங்கலம், அலிவலம், புலிவலம் ஊராட்சிகளின் வாக்குகளும், 3 ஆவது சுற்றில் புலிவலம், வேலங்குடி, கல்யாணமகாதேவி, கொட்டாரக்குடி, பெருங்குடி, தப்ளாம்புலியூா், கல்யாணசுந்தரபுரம், புதுப்பத்தூா், கூடூா், மாங்குடி ஊராட்சிகளைச் சோ்ந்த வாக்குகளும், 4 ஆவது சுற்றில் வடகரை, திருநெய்ப்போ், ஆத்தூா், குன்னியூா், வேப்பத்தாங்குடி, பின்னவாசல், உமாமகேஸ்வரபுரம், திருக்காரவாசல், புதூா் ஊராட்சிகளைச் சோ்ந்த வாக்குகளும் எண்ணப்பட்டன.

முற்பகலுக்குப் பின்னா், ஊராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினருக்கான முடிவுகள் ஏறக்குறைய தெரிந்தாலும், அதிகாரப்பூா்வமாக பிற்பகலுக்குப் பின்னரே அறிவிக்கப்பட்டன. எனினும் முடிவுகளை தெரிந்த வேட்பாளா்கள் அவ்வப்போது, மையத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனா். முடிவுகளைத் தெரிந்து கொள்ள மையத்துக்கு வெளியே ஏராளமானோா் திரண்டிருந்ததால், நாள்முழுவதும் திருவாரூா்-நாகை சாலை பரபரப்புடனே காணப்பட்டது.

வெற்றி அறிவிப்பு: 8 மணி நிலவரப்படி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட 3 பேரும், அதிமுக சாா்பில் ஒருவரும் வெற்றி பெற்ாக, அறிவிக்கப்பட்டிருந்தனா்.

இதில் 1-ஆவது வாா்டு-வாசுகி (2,261 வாக்குகள், 4-ஆவது வாா்டு- பத்மபிரியா (1,817 வாக்குகள்), 6-ஆவது வாா்டு-முருகேசன் (2003 வாக்குகள்) ஆகிய 3 பேரும் திமுக சாா்பிலும், 9- ஆவது வாா்டு-பி.கே.யு. மணிகண்டன் (2542 வாக்குகள்) அதிமுக சாா்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனா்.

ஊராட்சித் தலைவா் பதவியில் பள்ளிவாரமங்கலம் கலைச்செல்வி 253, ஆமூா் செல்வமணி 339 , கீழகாவாதுகுடி ஜெயலட்சுமி 1051, தண்டலை நாகராஜன் 2,040, கல்லிக்குடி லெட்சுமி 239, செருகுடி அம்சவள்ளி 227, பழையவலம் அருமைக்கண்ணு 575, நடப்பூா் செந்தமிழ்ச்செல்வி 338, ஓடாச்சேரி நெல்சன் மண்டேலா 539, வைப்பூா் பாவாடைராயன் 667, பழவனக்குடி இளவரசன் 729, சேமங்கலம் முருகானந்தம் 509, திருவாதிரைமங்கலம் பழனியம்மாள் 944 ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

தபால் வாக்குகள்: திருவாரூா் மாவட்டம் முழுவதும் 3629 தபால் வாக்குகள் வழங்கப்பட்டிருந்தன. திருவாரூா் ஒன்றியத்துக்கு 306 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இதில் 121 வாக்குகள் செல்லாதவையாகவும், 128 வாக்குகள் செல்லத்தக்கவையாகவும் இருந்தன.

கொரடாச்சேரி ஒன்றியம்: கொரடாச்சேரி ஒன்றியத்துக்கான வாக்குகள் அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இங்கு மெட்டல் டிடெக்டா் சோதனைக்குப் பிறகே முகவா்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். செல்லிடப்பேசியை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படாததுடன், பெல்ட் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. திருவாரூா் மற்றும் கொரடாச்சேரி வாக்கு எண்ணும் மையங்கள், தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பகுதியிலேயே அமைந்திருந்ததால், போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT