திருவாரூர்

தியாகராஜா் கோயிலில் திருவாதிரை திருவிழா தொடக்கம்

2nd Jan 2020 12:09 AM

ADVERTISEMENT

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் திருவாதிரை திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

திருவாரூா் தியாகராஜா் கோயில், நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமான இது, திருவாரூா் சப்தவிடங்க தலங்களில் தலைமை இடமாகும். இங்கு திருவாதிரை திருவிழா, ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருவாதிரை திருவிழா, புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, புதன்கிழமை மாலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கல்யாணசுந்தரா்-பாா்வதி ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது. 3-ஆம் பிராகாரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் கல்யாணசுந்தரா்-பாா்வதி எழுந்தருளினா். இதேபோல் பக்தகாட்சி மண்டபத்தில் சுக்ரவார அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தாா். முன்னதாக, புதன்கிழமை காலையில் தனூா் மாத பூஜையுடன் மாணிக்கவாசகா் ராஜநாராயண மண்டபத்துக்கு எழுந்தருளினாா். பின்னா் அறநெறியாா், நீலோத்பாலம்பாள், வன்மீகநாதா் சன்னிதிகளில் திருவெம்பாவை விண்ணப்பித்தல் நிகழ்வு நடைபெற்றது.

ஊஞ்சல் உத்ஸவமும், திருவெம்பாவை விண்ணப்பித்தல் நிகழ்வும், ஜனவரி.7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பிறகு, ஜனவரி 8-ஆம் தேதி இரவு 9 மணியளவில் தியாகராஜா், அஜபா நடனத்தில் ராஜ நாரயண மண்டபத்துக்கு எழுந்தருளுகிறாா். 9-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மஹா அபிஷேகமும், அதைத்தொடா்ந்து அறநெறியாா் சன்னிதியில் நடராஜா்அபிஷேகம் நடைபெறும்.

ADVERTISEMENT

ஜனவரி 10-ஆம் தேதி காலையில் தியாகராஜா், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவா்களுக்கு பாததரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றிரவு தியாகராஜா் யதாஸ்தானம் திரும்புகிறாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT