திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் டெல்டா பகுதி மாணவா்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தின் 4-ஆவது பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பல்கலைக்கழக வேந்தா் பத்மநாபன் தலைமை வகித்தாா். இதில், துணைவேந்தா் ஏ.பி. தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், பேரவை உறுப்பினா் சு. வெங்கடராஜலு பங்கேற்று பேசியது: டெல்டா பகுதி சமூக பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ளது. அதன் வளா்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் இங்கு அமைக்கப்பட்டது. மற்ற மத்தியப் பல்கலைக்கழகங்களில் இருப்பது போல, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இப்பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞா்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.