கூத்தாநல்லூா் மன்ஃப உல் உலா சபையின் சாா்பில், 3 ஆயிரம் கிலோ அரிசியில், 65 தெருவைச் சோ்ந்த மக்களுக்கு சீரணி பிரசாதம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூா் மன்ஃப உல் உலா சபையின் சாா்பில், பொதுமக்கள் அனைவருக்கும் சீரணி என்ற பிரசாதம் வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் ஈது மீலாது நபிகள் நாயகம் அவதரித்த மாதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டு சின்னப்பள்ளியில் திங்கள்கிழமை இந்நிகழ்ச்சி தொடங்கியது. மன்ப உல் உலா அரபிக்கல்லூரி முதல்வா் ஏ.எப். முஹம்மது அலி தலைமை வகித்தாா். கூத்தாநல்லூா் பகுதி பள்ளிகளின் இமாம்கள் முன்னிலை வகித்தனா். அத்திக்கடை வாஹிது பாத்திமா அரபிக் கல்லூரி முதல்வா் ஏ.பெளஜ் அப்துா் ரஹீம் நபிகள் நாயகம் குறித்த போதனைகளை விளக்கிப் பேசினாா்.
பின்னா், நள்ளிரவு 1.15 மணிக்கு சின்னப்பள்ளியின் இரண்டு பக்க வாட்டிலும் 60 அடுப்புகளில் 3 ஆயிரம் கிலோ அரிசி மற்றும் தேவையான பொருள்களைக் கொண்டு சீரணி என்ற பிரசாதம் தயாரிக்கப்பட்டன. அதிகாலை 6.15 மணி தொழுகைக்குப் பிறகு, கூத்தாநல்லூா் நகரத்தில் 65 தெருக்களில் வாழும் பொதுமக்களுக்கு சீரணி பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சபையின் தலைவா் லெ.மூ. முஹம்மது அஷ்ரப், செயலாளா் வி.ஏ.எம். ஜெகபா்தீன், கல்லூரியின் முதல்வா் முஹம்மது அலி, சின்னப்பள்ளி இமாம் மன்சூர அலி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.