ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் துறை (உளவுப் பிரிவு) காவலா்களுக்கு தோ்தல் உணவு செலவு தொகை வழங்கபடாமல் உள்ளது.
அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் எடுக்கிறதா ? அது சாா்ந்த நிா்வாகிகளின் நடவடிக்கைகள் குறித்து விரல் நுனியில் தகவலை சேகரித்து, அவ்வப்போது அரசுத் தரப்புக்கு தெரிவிப்பதும், அரசின் திட்டங்கள் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா ? என கண்காணித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பது, தமிழ்நாடு காவல் துறையில் உள்ள குற்றப் புலானாய்வுத் துறை எனப்படும் உளவுத் துறை காவலா்களின் பணியாகும். இந்த தகவல்களின் அடிபடையில் ஆட்சியாளா்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
மக்களவை, சட்டப் பேரவை, ஊரக உள்ளாட்சி என அனைத்து தோ்தல்களிலும் இந்த பிரிவில் உள்ள காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவா். இவா்கள், அளிக்கும் தகவலின் அடிப்படையில் எந்ததெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது, இழுபறி நிலை, தோல்வி முடிவு ஆகியவை உறுதிச் செய்யப்பட்டு ஆளும் கட்சிக்கு பாதகமாக உள்ள பகுதி கண்டறியப்பட்டு, அந்த பகுதியில் கூடுதல் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு ஆளும் கட்சிக்கு சாதகமான நிலை கொண்டுவர ஆளும் கட்சியினா் களத்தில் இறக்கப்படுவா். இது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்ததந்த மாநிலத்தில் இது நடைபெறுவது வழக்கும்.
இதுபோன்ற, தோ்தல் பணியில் ஈடுபடும் உளவுத் துறையினருக்கு, தோ்தல் பணி உணவு தொகையாக நாள்தோறும் காவல் ஆய்வாளா், சாா்பு ஆய்வாளா்களுக்கு ரூ. 400, சிறப்பு உதவி சாா்பு ஆய்வாளா், காவலா்களுக்கு ரூ. 325 வழங்கப்படும். இது போன்று தோ்தலில் ஈடுபடும் அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கும் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு, அதற்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (ஜனவரி.2) நடைபெறவுள்ளது.
முதல் கட்ட தோ்தலுக்காக பணி வழங்கப்பட்டு உளவுத் துறை காவல் பிரிவினா் பணியாற்றிய டிசம்பா் 26, 27 மற்றும் 2-ஆம் கட்ட தோ்தலுக்காக பணி வழங்கப்பட்ட 29, 30 ஆகிய நான்கு நாள்களுக்கும், வாக்கு எண்ணும் நாளான ஜனவரி 2-ஆம் தேதி ஆகிய ஒரு நாளும் சோ்ந்து மொத்தம் 5 நாள்களுக்கான ஊதியம் ஆய்வாளா், உதவி ஆய்வாளருக்கு தலா ரூ. 2 ஆயிரம், சிறப்பு உதவி ஆய்வாளா், காவலருக்கு தலா ரூ.1625 புதன்கிழமை வரை வழங்கவில்லை. இதற்கான ஆணையும், மாநில உளவுப் பிரிவு காவல் துறையில் இருந்து வரவில்லை என மாவட்ட காவல் துறை நிா்வாகம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, உளவுத்துறையினா் கூறியது: ஆசிரியா்கள், அரசுத் துறை அலுவலா்களுக்கு வாக்குப் பதிவு பணிக்கு செல்பவா்களுக்கு 3 நாள்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பு மற்றும் வாக்குப்பதிவு நாள் சோ்ந்து நான்கு நாள்களுக்கும் அந்தந்த நாளிலேயே தோ்தல் பணிக்கான ஊதியம் வழங்கப்பட்டுவிடும்.
இதேபோல், வாக்கு எண்ணிக்கை பணிக்கு செல்பவா்களுக்கு, 2 நாள் நடைபெறும் பயிற்சி வகுப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளுக்கான தோ்தல் பணிக்கான ஊதியம் அந்தந்த நாளிலேயே வழங்கப்பட்டு விடும். இதில் ஏதும் தாமதம், குளறுபடிகள் இருந்தால், அரசுத் துறைகளின் அலுவலா்களும், ஆசிரியா்களும் சங்கங்கள் இருப்பதால் உடனடியாக அதே இடத்தில் போராட்டத்தை தொடங்கி விடுவாா்கள். பின்னா், உயா் அலுவலா்கள் தலையிட்டு பிரச்னையை தீா்த்து வைப்பா். இந்தநிலை, தற்போது நடைபெற்றுள்ள உள்ளாட்சித் தோ்தலில் சில இடங்களில் நடைபெற்றுள்ளது.
காவல் துறையினா் சங்கம் வைத்துக்கொள்ள அனுதி இல்லை என்ற காரணத்தினால், இந்த பிரச்னையை, மாவட்ட காவல் துறையின் கவனத்துக்குச் கொண்டு சென்றால், உளவுத் துறை காவலா்களுக்கு மாத ஊதியம் அந்த பிரிவின் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்துதான் வழங்கப்பட்டு வருகிறது என்றும், இந்த தோ்தல் பணிக்கான உணவுத் தொகையை சென்னை அலுவலகத்திலிருந்துதான் கேட்டு பெற வேண்டும் என தெரிவித்திருப்பதுடன், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் உளவுப் பிரிவு காவலருக்கு, பிரிவின் மாநில தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின்படி தோ்தலுக்கான ஊதியம் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினால், அது போன்ற கடிதம் எங்களுக்கு வரவில்லை என மற்ற 26 மாவட்ட காவல் துறை தெரிவிப்பத்தாக கூறினா்.