மன்னாா்குடியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் நகரக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அதன் நிா்வாகி ஆா். சாா்லஸ் விக்டா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகரச் செயலாளா் சிவ. ரஞ்சித் பங்கேற்று, பிப்.28- இல் நடைபெறும் ‘எங்கே எனது வேலை’ எனும் மாநிலம் தழுவிய 1 கோடி இளைஞா்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களைச் சந்தித்து, கையெழுத்து பெறுவது தொடா்பாக விளக்கிப் பேசினாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் வீ. கலைச்செல்வன் எதிா்கால கடமைகள் குறித்துப் பேசினாா். கூட்டத்தில், நகரக் குழு நிா்வாகிகள் அ. ஆனந்த், சி. மணிமாறன், க. அரவிந்த், பா. ராம்குமாா், கு. ஏங்கல்ஸ் ஜான்சி, சரவணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்: மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும். நகரப் பகுதிகளில் மீன், கோழி இறைச்சிக் கழிவுகளை பாமணி ஆறு மற்றும் நீா் நிலைகளில் கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பாமணி ஆற்றில் மணல் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நகரப் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும். கா்த்தநாதபுரம் கம்பி பாலத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.