திருவாரூர்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அரசாணை வெளியீடு: ‘விவசாயிகள் அச்சமின்றி பணிகளில் ஈடுபடலாம்’

22nd Feb 2020 11:59 PM

ADVERTISEMENT

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், விவசாயிகள் எவ்வித அச்சமுமின்றி விவசாயப் பணிகளில் ஈடுபடலாம் என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

நன்னிலம் வட்டம் பேரளம் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சா், மேலும் பேசிது:

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதற்கான அரசாணையையும் முதல்வா் வெளியிட்டுள்ளாா். எனவே விவசாயிகள் எவ்வித அச்சமுமின்றி விவசாயப் பணிகளில் ஈடுபடலாம். இவ்வாறு மக்கள் நலனுக்காக நடைபெறுகிற அதிமுக அரசுக்கு மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு ஆதரவு தந்து கொண்டிருக்கிறாா்கள்.

கல்வித்துறையை பொறுத்தவரையிலும் தமிழக அரசு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வி மிக அவசியம். உயா் பதவிக்கு செல்ல வேண்டுமென்றால் அடிப்படைக் கல்வி மிக முக்கியம். எனவே மாணவா்கள் கல்வியிலேயே முழு கவனத்தையும் செலுத்தி, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றாா் அமைச்சா் காமராஜ்.

ADVERTISEMENT

 

தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் அமைச்சா் வழங்கினாா். பின்னா் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன .நிகழ்ச்சியில் திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.தியாகராஜன், நன்னிலம் ஒன்றியத் துணை பெருந்தலைவா் சிபிஜி. அன்பு, பேரளம் பேரூராட்சி முன்னாள் தலைவா் கனகவள்ளி சுந்தரமூா்த்தி, தலைமை ஆசிரியை இந்திரா, ஆசிரியா்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT