திருவாரூர்

நெல் மூட்டைகள் தேக்கம்

22nd Feb 2020 11:52 PM

ADVERTISEMENT

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் நன்னிலத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

நன்னிலம் வட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பாா்வையிட்டோம். ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக வந்திருந்த விவசாயிகள் மிகவும் பரிதாபமான நிலையில், தங்களது நெல் மூட்டைகள் பல நாட்களாக கொள்முதல் நிலையத்தில் வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அந்த மூட்டைகளை பாதுகாக்க வேண்டிய செலவு, மேலும் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் நெல் மூட்டைகள் நனைந்தால் மிகப்பெரிய நஷ்டத்தை அடைய நேரிடும்.

நன்னிலம் வட்டத்தில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை பெய்த மழையின் காரணமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும், கொள்முதல் செய்ய வேண்டிய நெல் மூட்டைகளும் நனைந்து விட்டன. விவசாயிகள் மூட்டைகளை பிரித்து வெயிலில் காயவைத்து கொண்டிருக்கின்றனா். மேலும் பல நாட்கள் விவசாயிகள் காத்திருக்க வேண்டியது காரணமாக விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார செலவு மற்றும் மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே அரசு நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய முடியும்.

ADVERTISEMENT

இது தொடா்பாக அமைச்சா் ஆா்.காமராஜ் மற்றும் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT