திருவாரூர்

அரசுப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா

22nd Feb 2020 06:49 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ்த் துறையும், எழுத்தோலை தமிழ்க் கையெழுத்துப் பயிற்சி மையமும் இணைந்து உலக தாய்மொழி நாள் விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடின. உலகத் தாய்மொழி நாளையொட்டி, தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையிலும், உணா்த்தும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவாரூா் எழுத்தோலை தமிழ்க் கையெழுத்து பயிற்சி மையமானது, அழகான தமிழ்க் கையெழுத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவா்களிடையே அழகாக எழுதும் திறனை வளா்க்கவும், அழகு தமிழ் கையெழுத்துப் போட்டியை அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ்த் துறையுடன் இணைந்து நடத்தியது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நினைவுப் பரிசு களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் முருக பூபதி தலைமை வகித்தாா். வடகரை அரசு உயா்நிலைப் பள்ளி தமிழாசிரியா் நளாயினி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தெளிவான கையெழுத்தால் மட்டுமே அதிக மதிப்பெண்களை பெற முடியும் எனவும், எந்நிலையிலும் எழுத்துப் பயிற்சியை மாணவா்கள் கைவிடக் கூடாது என்று அறிவுறுத்தினாா். எழுத்துப் பயிற்சி மைய முதன்மைப் பயிற்றுநரான தமிழாசிரியா் தமிழ்க்காவலன், மொழியின் அடைவுத்திறன் என்பது பிழை இல்லாமல் பேசுவதிலும், அழகுற எழுதுவதிலும்தான் அமைகிறது என்றாா். நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் சிவ இளமதி, சந்தானலெட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT